தரகர்களிடம் இருந்து ரூ.48 லட்சம் தங்க நகைகள் பறிமுதல்
திருச்சி விமான நிலைய பகுதியில் தரகர்களிடம் இருந்து ரூ.48 லட்சம் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
செம்பட்டு
மலேசியா, சிங்கப்பூர், சார்ஜா போன்ற வெளிநாடுகளில் இருந்து திருச்சிக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன. வெளிநாடுகளில் இருந்து விமானங்களில் வரும் பயணிகளில் சிலர் தங்கம் கடத்தி வருவதும், அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர் கதையாக இருந்து வருகிறது. சிலர் கழுத்தில் மற்றும் கைகளில் அணிந்து வரும் தங்க நகைகளை வாங்குவதற்காக 30-க்கும் மேற்பட்ட தரகர்கள் செயல்படுகின்றனர். அவர்கள் விமான நிலையத்தின் எதிரே நின்று கொண்டு வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளிடம் தங்க நகைகளை பெறுவது வழக்கம்.
இதுகுறித்து திருச்சி மாநகர போலீஸ் கமிஷனருக்கு நேற்று சிலர் தகவல் தெரிவித்தனர். அவரது உத்தரவின்பேரில், விமான நிலைய வளாகத்தில் போலீசார் நின்று கண்காணித்தனர்.
6 தரகர்கள் கைது
அப்போது தங்க நகைகளை வாங்குவதற்காக காத்திருந்த தரகர்களான திருச்சி மேலசிந்தாமணி பகுதியைச் சேர்ந்த மெஹபூப்கான் (வயது 44), சிவகங்கை மாவட்டம் இளையான்குடியைச் சேர்ந்த ஜவஹர் சாதிக் (41), திருவாரூர் மாவட்டம் விஜயபுரம் பகுதியைச் சேர்ந்த சிராஜ்தீன் (39), அதே பகுதியைச் சேர்ந்த செய்யது அபு தாஹீர் (41), திருவாரூர் பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த நிசார் அகமது (37) மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் ஆனந்தூர் பகுதியைச் சேர்ந்த ஷாஜகான் (40) ஆகிய 6 பேரை பிடித்து திருச்சி விமான நிலைய போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.அப்போது அவர்கள் வெளிநாட்டில் இருந்து விமானங்களில் வந்தவர்களிடம் தங்க நகைகளை வாங்கியது தெரிய வந்தது. அதனைத்தொடர்ந்து அவர்களிடமிருந்து ரூ.48.25 லட்சம் மதிப்பிலான 965 கிராம் தங்க நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் 6 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இந்த சம்பவம் திருச்சி விமான நிலைய பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.