பலத்த மழை காரணமாக நீர்நிலைகள் நிரம்பின

பலத்த மழை காரணமாக நீர்நிலைகள் நிரம்பி வழிகின்றன.

Update: 2021-11-19 19:57 GMT
தா.பழூர்:
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள சுத்தமல்லி அணைக்கு செந்துறை மற்றும் அரியலூர் பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக நீர்வரத்து அதிக அளவில் உள்ளது. இதனால் அணையின் மொத்த உயரமான 4.75 மீட்டர் உயரத்தில் 4.47 மீட்டர் உயரத்திற்கு அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. மேலும் சுத்தமல்லி அணையின் முழு கொள்ளளவான 226.8 மில்லியன் கன அடி நீர் நிரம்பியுள்ளது. அணைக்கு தொடர்ந்து வினாடிக்கு 365 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் அணையின் பாதுகாப்பை கருதி அணையில் இருந்து ஏற்கனவே ஸ்ரீபுரந்தான் பெரிய ஏரி, கோவை தட்டை ஏரி ஆகிய ஏரிகளுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு ஏரிகள் நிறைந்து விட்டன. எனவே உபரி நீர் போக்கி வழியாக வினாடிக்கு 175 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
தொடர் மழை காரணமாக பொன்னார் பிரதான கால்வாயில் இரண்டு கரைகளையும் தொட்டுக் கொண்டு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. சிந்தாமணி ஓடையில் காட்டாற்று வெள்ளம் கரை புரண்டு வருகிறது. குறிச்சி மதகில் பொன்னர் தண்ணீரும், சிந்தாமணி ஓடை தண்ணீரும் ஒன்றாக கலந்து குறிச்சி கலிங்கு வழியாக கொள்ளிடம் ஆற்றுக்கு திருப்பி விடப்படுகிறது. தா.பழூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளான காசுடையான் ஏரி, அணைக்குடி ஏரி, சித்தேரி, சுக்கிரன் ஏரி மற்றும் பூவோடை ஆகிய ஏரிகள் அதன் முழு கொள்ளளவில் 85 முதல் 90 சதவீத அளவிற்கு நிரம்பி உபரி நீர் செங்கால் ஓடை வழியாக கொள்ளிடம் ஆற்றுக்கு திருப்பி விடப்படுகிறது. தா.பழூர் ஒன்றியம் முழுவதும் சிறுசிறு குளங்கள் மற்றும் ஏரிகள் முழுமையாக நிரம்பி உள்ளன. ஊராட்சி ஒன்றிய கட்டுப்பாட்டில் உள்ள பல்வேறு ஏரிகள் அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளன.

மேலும் செய்திகள்