ஆம்பூரில் குடியிருப்புகளில் வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்கள் சாலை மறியல்
ஆம்பூரில் குடியிருப்புகளில் மழைவெள்ளம் புகுந்ததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஆம்பூர்
ஆம்பூரில் குடியிருப்புகளில் மழைவெள்ளம் புகுந்ததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர் காந்தி, கதிர் ஆனந்த் எம்.பி. ஆய்வு செய்தனர்.
முகாம்களில் தங்கவைப்பு
ஆம்பூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏரி நிரம்பி உபரி நீர் வெளியேறி கானாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்தப்பகுதியில் எம்.எல்.ஏ. வில்வநாதன், நகராட்சி ஆணையர் ஷகிலா, தாசில்தார் ஆனந்தகிருஷ்ணன், நகராட்சி பொறியாளர் ராஜேந்திரன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மீட்பு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆம்பூர் அடுத்த வீராங்குப்பம் பகுதியில் வெள்ளநீர் சூழ்ந்த இடங்களில் வசித்த 300-க்கும் மேற்பட்டோர் அரசு பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மாதனூர், பச்சகுப்பம் பகுதியில் வெள்ள நீர் சூழ்ந்த இடங்களில் வசித்த பொது மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஆம்பூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 1,000 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
பொதுமக்கள் சாலை மறியல்
ஆம்பூர் அடுத்த பாங்கி ஷாப் பகுதியில் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் அவர்களது வாகனங்களை சாலையின் குறுக்கே நிறுத்தி மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த உமராபாத் போலீசார் அப்பகுதி மக்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு விரைவில் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.
இதேபோல் சாய்பாபா கோவில் தெரு, இந்திரா நகர் பகுதியில் வெள்ள நீர் சூழ்ந்ததால் அப்பகுதி மக்கள் பைபாஸ் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த தாசில்தார் ஆனந்தகிருஷ்ணன் மற்றும் டவுன் போலீசார் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதிகாரிகள் மற்றும் போலீசார் விரைவில் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதனால் அனைவரும் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
அமைச்சர், எம்.பி. ஆய்வு
ஆம்பூர் அடுத்த பெரியவரிகம் பகுதியில் குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதை நேற்று கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். எம்.எல்.ஏ.க்கள் ஆம்பூர் வில்வநாதன், குடியாத்தம் அமலுவிஜயன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
ஆம்பூர் அடுத்த மாதனூர் மற்றும் விண்ணமங்கலம் ஊராட்சி எம்.சி.ரோடு பகுதிகளில் தொடர் கனமழையால் வெள்ளநீர் சூழ்ந்துள்ள பகுதிகளை வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். விரைவில் வெள்ள நீர் செல்ல நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மாதனூர் ஒன்றியக் குழு தலைவர் சுரேஷ்குமார், ஆம்பூர் நகர தி.மு.க. செயலாளர் எம்.ஆர் ஆறுமுகம், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சசிகலா சாந்தகுமார், ஒன்றியக்குழு உறுப்பினர் கார்த்திக், வட்டார வளர்ச்சி அலுவலர் துரை மற்றும் அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.