பாலாறு அணைக்கட்டில் 1 லட்சம் கனஅடி நீர் வெளியேற்றம்

வாலாஜா அணைக்கட்டில் இருந்து 1 லட்சம் கன அடி நீர் வெளியேற்றப் படுவதால் ராணிப்பேட்டை பழைய பாலத்தில் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-11-19 19:33 GMT
ராணிப்பேட்டை

வாலாஜா அணைக்கட்டில் இருந்து 1 லட்சம் கன அடி நீர் வெளியேற்றப் படுவதால் ராணிப்பேட்டை பழைய பாலத்தில் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

1 லட்சம் கனஅடி  நீர் 

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த சில தினங்களாக இடைவிடாது செய்து வருகிறது. மேலும் ஆந்திர மாநிலம் கலவ குண்டா அணையிலிருந்து உபரி நீர் அதிக அளவில் வெளியேற்றப்பட்டு பாலாற்றில் வந்து கலக்கிறது. இதனால் பாலாற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இதனால் வாலாஜா அருகே உள்ள பாலாறு அணைக்கட்டில் 118 ஆண்டுகளுக்கு பிறகு மிக அதிகப்படியான அளவாக 1,04,054 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனை ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நேற்று அதிகாலை 3 மணியளவில் நேரடியாக பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

போலீஸ் பாதுகாப்பு

இந்தநிலையில் நேற்று முழுவதும் மழை பெய்து கொண்டிருந்தது. இருந்தபோதிலும் பல ஆண்டுகளுக்குப் பிறகு பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ராணிப்பேட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பொதுமக்கள் வெள்ளத்தை காண குடும்பம், குடும்பமாக வந்து பார்த்து செல்கின்றனர். சிலர் ஆபத்தை உணராமல் மேம்பாலத்தின் ஓரம் நின்று செல்போனில் செல்பியும் எடுத்துக்கொண்டனர்.

இதனால் ராணிப்பேட்டை அருகே உள்ள பாலாறு மேம்பாலத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீசார் ராணிப்பேட்டை பாலாறு பழையபாலத்தின் இருபகுதிகளிலும் தடுப்புகளை ஏற்படுத்தி, பொதுமக்கள் ஆற்றின் அருகே செல்லாதவாறு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.  ஒலி பெருக்கி மூலமும் எச்சரிக்கை விடுத்தனர்.

அமைச்சர் ஆய்வு

நேற்று மாலை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி, வாலாஜா அருகே உள்ள பாலாறு அணைக்கட்டை நேரில் ஆய்வு செய்தார். அப்போது ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன், உதவி கலெக்டர் பூங்கொடி, வாலாஜா தாசில்தார் ஆனந்தன், வாலாஜா ஒன்றிய குழு தலைவர் சேஷா வெங்கட் மற்றும் பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை அதிகாரிகள், வருவாய் துறையினர் உடன் இருந்தனர்.

மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
அரக்கோணம்- 68.4, ஆற்காடு- 81.5, காவேரிப்பாக்கம்-88, வாலாஜா -120.4, அம்மூர்- 84.1, சோளிங்கர்- 86, கலவை-129.

மேலும் செய்திகள்