கோவில்களில் மகாதீபம் ஏற்றி வழிபாடு

கோவில்களில் மகாதீபம் ஏற்றி வழிபாடு நடந்தது.

Update: 2021-11-19 19:16 GMT
பெரம்பலூர்:

கார்த்திகை தீபத்திருநாள்
பெரம்பலூர் மாவட்டத்தில் கார்த்திகை மகா தீப திருநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் மாலையில் கோவில்களில் பெரிய விளக்குகளில் மகாதீபம் ஏற்றப்பட்டது. சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.
இதில் பெரம்பலூர் அருகே சிறுவாச்சூரில் பிரசித்தி பெற்ற மதுரகாளியம்மன் கோவிலில் கார்த்திகை தீப திருநாளையொட்டி தெப்பக்குளத்தை சுற்றி மாலையில் 1,008 அகல் விளக்குகளில் தீபங்கள் ஏற்றி பக்தர்கள் வழிபட்டனர். தெப்பக்குளம் அகல்விளக்கு தீபங்களின் வெளிச்சத்தில் ஜொலித்தது. மேலும் பொதுமக்கள் தங்களது வீட்டின் முன்பு வண்ண கோலமிட்டு குத்துவிளக்கேற்றியும், அகல்விளக்குகளை ஏற்றியும் கார்த்திகை தீப திருநாளை கொண்டாடினர்.
மகாதீபம் ஏற்றப்பட்டது
பெரம்பலூர் அருகே எளம்பலூரில் உள்ள பிரம்மரிஷி மலையில் ஆண்டுதோறும் மகர சங்கராந்தி விழா மற்றும் திருக்கார்த்திகை நாட்களில் மகாதீபம் ஏற்பட்டு வருகிறது. அதன்படி 39-வது ஆண்டு திருக்கார்த்திகை தீபத்திருவிழா நேற்று நடந்தது. இதையொட்டி பிரம்மரிஷி மலை அடிவாரத்தில் உள்ள நளினி அம்மன் உடனுறை காகன்னை ஈஸ்வரர் கோவிலில் நேற்று காலை கோபூஜை, அஸ்வபூஜையுடன் கணபதிஹோமம், 210 சித்தர்கள் யாகம் நடந்தது. பின்னர் பெரம்பலூர் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் இருந்து தீபக்கொப்பரை ஊர்வலம் புறப்பட்டு முக்கிய வீதிகளின் வழியாக சென்று எளம்பலூர் மலையை அடைந்தது.
மலை உச்சியில் அன்னை சித்தர் ராஜகுமார்சுவாமி அருளாசியுடன் மாலையில் ருத்ர ஜெபம், 210 மகா சித்தர்கள் யாகம், அருட்பெருஞ்சோதி அகவல் பாராயணம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து மாலை 6 மணிக்கு மலை உச்சியில் உள்ள கொங்கணர் தூண் அருகே மிகப்பெரிய செப்புக்கொப்பரையில் 1,008 லிட்டர் பசு நெய், 2 ஆயிரம் மீட்டர் திரியுடன், நல்லெண்ணெய், இலுப்பை எண்ணெய், 108 கிலோ பூங்கற்பூரம் ஆகியவற்றுடன் மகாதீபம் தயார் செய்யப்பட்டு வாணவேடிக்கையுடன் மகா கார்த்திகை தீபஜோதி ஏற்றப்பட்டது. மேலும் மலை உச்சியில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. மலையடிவாரத்தில் அன்னதானம் நடைபெற்றது. சாதுக்களுக்கு வஸ்திர  தானம் வழங்கப்பட்டது. விழாவில் இந்து சமய அறநிலையத்துறை, பல்வேறு துறை அலுவலர்கள், குருகடாட்சம் மெய்யன்பர்கள் கலந்து கொண்டனர். கொரோனா பரவலை தடுக்கும் விதமாக கோவிலுக்குள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. ஆனால் ஏராளமான பக்தர்கள் மலை ஏறி மகா தீபத்தையும், கொங்கணர் தூணில் உள்ள பெருமாள் சிலையையும் வழிபட்டனர்.

மேலும் செய்திகள்