ஏனாதி ஊராட்சியில் 16 ஆண்டுகளுக்கு பிறகு பெரிய கண்மாய் நிரம்பி கலிங்கு வழியாக தண்ணீர் செல்கிறது மலர்தூவி, தேங்காய் உடைத்து பொதுமக்கள் வரவேற்பு

ஏனாதி ஊராட்சியில் பெரிய கண்மாயில் 16 ஆண்டுகளுக்கு பின் நீர் நிரம்பி கலிங்கு வழியாக செல்கிறது. கண்மாயில் பொதுமக்கள் மலர்தூவி, தேங்காய் உடைத்து வரவேற்றனர்.

Update: 2021-11-19 18:12 GMT
பொன்னமராவதி:
வரவேற்பு 
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள ஏனாதி ஊராட்சி பெரிய கண்மாய் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கன மழையால் நீர் நிரம்பி கலிங்கு வழியாக செல்கின்றது. தொடர் மழையின் காரணமாக 16 ஆண்டுகளுக்கு பின் நீர் நிரம்பி கலிங்கு செல்லும் கண்மாய் மடையில் அப்பகுதி மக்கள் மலர் தூவி, தேங்காய் உடைத்து, மாலை அணிவித்து வர்ண பகவானை வணங்கி வழிபட்டனர். மேலும் 16 ஆண்டுகளுக்கு பின் கலிங்கு செல்லும் மடை அருகில் பொது மக்கள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்து வருகின்றனர்.
இறையகுளம் நிரம்பியது
அன்னவாசல் பகுதிகளில் நேற்று முன்தினம் முழுவதும் விட்டுவிட்டு மழை தொடர்ந்து பெய்தது. வேங்கைவயல் கிராமத்தில் இறையகுளம் நிரம்பி தண்ணீர் வெளியேறியது. தாசில்தார் உள்ளிட்ட வருவாய்த்துறை, ஊராட்சித்துறையினர் குளத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
நிவாரண முகாம்
இந்த தொடர்மழையின் காரணமாக மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட 115 பேர் பல்வேறு நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதில் புதுக்கோட்டை திருக்கோகர்ணம் நடுநிலைப்பள்ளியில் 5 பேரும், குளத்தூர் சத்தியமங்கலம் அரசு பள்ளியில் 48 பேரும், புதுக்கோட்டை பாவேந்தர் பள்ளியில் 62 பேரும் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
வடகாடு அருகேயுள்ள சூரன்விடுதி பகுதியில் நேற்று முன்தினம் காலை முதல் அம்புலி ஆற்றுப்பகுதியில் தண்ணீர் வரத்து அதிகமாகி கல்லோடை என்ற இடத்தில் இருந்து தண்ணீர் அருவி போல கொட்டியது. 
கீரனூர்
கீரனூர் சிவன்கோவிலில் குளம் போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது. கோவில் குளத்தில் இருந்து தண்ணீர் உள்ளே தொடர்ந்து வருகிறது. இதனால் அன்றாடம் நடக்கும் பூஜைகள் பாதிக்கப்படுகிறது.
ஆவுடையார்கோவில் வெள்ளாற்றில் தற்போது பெய்த மழையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

மேலும் செய்திகள்