மேல்மலையனூர் அருகே பண்ணைக்குள் வெள்ளம் புகுந்து 3 ஆயிரம் கோழிகள் செத்தன
மேல்மலையனூர் அருகே பண்ணைக்குள் மழைவெள்ளம் புகுந்ததால் 3 ஆயிரம் கோழிகள் நீரில் மூழ்கி செத்தன. திருவெண்ணெய்நல்லூரில் 100 ஆடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன;
மேல்மலையனூர்
கோழிப்பண்ணை
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு வரை பெய்த கனமழையினால் பல்வேறு பகுதிகளில் உள்ள ஏரி, குளங்கள் நிரம்பி வழிந்தன. தரைப்பாலங்கள் நீரில் மூழ்கியதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. மேல்மலையனூர் ஏரியிலிருந்து வெளியேறிய உபரிநீர் சங்கராபரணி ஆற்றில் சென்றதால் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த நிலையில் மழைவெள்ளத்தில் 3 ஆயிரம் கோழிகள், 100 ஆடுகள் சிக்கி பலியாகின. அதன் விவரம் வருமாறு:- மேல்மலையனூர் அருகே செக்கடிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் மனைவி விஜயா என்பவர் கோட்டப்பூண்டி அருகில் கோழிப்பண்ணை வைத்துள்ளார். இதில் நேற்று முன்தினம் இரவு திடீரென்று வெள்ளம் புகுந்ததால் பண்ணையில் இருந்த 3,200 கோழிகளில் 3 ஆயிரம் கோழிகள் நீரில் மூழ்கி செத்தன. 200 கோழிகள் மட்டும் உயிர் தப்பின. மேலும் சாத்தாம்பாடி, சிறுதலைப்பூண்டி, செக்கடிக்குப்பம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின.
100 ஆடுகள்
திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள ஏனாதிமங்கலம் கோரையாற்றின் மேடான பகுதியில் தடுத்தாட்கொண்டூர் கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் யாசகம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் வளர்த்து வருகிறார். நேற்று இரவு பெய்த தொடர் கனமழை மற்றும் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் திடீரென ஆடுகள் அடைத்து வைக்கப்பட்டிருந்த பட்டிக்குள் தண்ணீர் புகுந்தது. இதில் 100 ஆடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.
இதுபற்றிய தகவல் அறிந்து வந்த மாவட்ட தீயணைப்பு நிலைய அலுவலர் ராபின் காஸ்ட்ரோ, திருவெண்ணெய்நல்லூர் தீயணைப்பு நிலைய அலுவலர் சுந்தர்ராஜன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து எஞ்சிய 900 ஆடுகளை கயிறு மற்றும் பரிசல் மூலம் பத்திரமாக மீட்டனர்.