கிறிஸ்தவ ஆலயத்தில் சிக்கிய பாதிரியார் உள்பட 8 பேர் மீட்பு
மணம்பூண்டி துரிஞ்சல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் கிறிஸ்தவ ஆலயத்தில் சிக்கிய பாதிரியார் உள்பட 8 பேர் மீட்கப்பட்டனர்.;
திருக்கோவிலூர்,
திருக்கோவிலூர் அருகே மனம்பூண்டி துரிஞ்சல் ஆற்றங்கரையோரம் கிறிஸ்தவ ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் நேற்று முன்தினம் இரவு பாதிரியார் ஜோயல் (வயது 42), ஜோதி(40), கிருபா(30), ஞானஒளி(60) ஆகியோர் இருந்தனர். அப்போது துரிஞ்சல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, கிறிஸ்தவ ஆலயத்துக்குள் தண்ணீர் புகுந்தது. 4 அடிக்கு மேல் தண்ணீர் தேங்கி நின்றதால் அவர்களால் ஆலயத்தை விட்டு வெளியே வரமுடியவில்லை. இது பற்றி பாதிரியார் ஜோயல் செல்போன் மூலம் அதே கிராமத்தை சேர்ந்த அரவிந்தன்(45) என்பவருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து அரவிந்தன், மணிமாறன்(42), ஜோசப்(32), ரெபேக்கா(55) ஆகியோர் அவர்களை மீட்க சென்றனர். அதற்குள் மேலும் அதிகளவு தண்ணீர் வந்ததால் அவர்களும் ஆலயத்திலேயே சிக்கிக்கொண்டனர். நேற்று முன்தினம் இரவு முதல் விடிய, விடிய என்னசெய்வதென்று தெரியாமல் ஆலயத்தின் மாடியில் அமர்ந்திருந்தனர்.
8 பேர் மீட்பு
இது பற்றி தகவல் அறிந்ததும் நேற்று காலை 5 மணி அளவில் திருக்கோவிலூர் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஆனால் அவர்களது முயற்சி தோல்வியில் முடிவடைந்தது.
இது பற்றி தகவல் அறிந்ததும் உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் ஆகியோர் மணம்பூண்டிக்கு விரைந்து வந்தனர். இதற்கிடையில் விழுப்புரத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட ரப்பர் படகு மூலம் தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். 2½ மணி நேரத்திற்கு பிறகு 8 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். இவர்களுக்கு அமைச்சர் பொன்முடி, மாவட்ட கலெக்டர் மோகன் ஆகியோர் ஆறுதல் கூறி, வீடுகளுக்கு அனுப்பி வைத்தனர்.
அப்போது விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயச்சந்திரன், விழுப்புரம் மத்திய மாவட்ட துணை செயலாளர் டி.என்.முருகன், மணம்பூண்டி ஒன்றிய தி.மு.க. செயலாளர் அ.சா.ஏ.பிரபு, முகையூர் ஒன்றிய தி.மு.க. செயலாளர் கண்டாச்சிபுரம் ஜி. ரவிச்சந்திரன், முகையூர் ஒன்றியக்குழு தலைவர் தனலட்சுமி உமேஷ்வரன், ஒன்றியக்குழு துணைத்தலைவர் மணம்பூண்டி பி.மணிவண்ணன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் ராஜீவ்காந்தி, விழுப்புரம் மத்திய மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வக்கீல் ராயல்.எஸ்.அன்பு, திருக்கோவிலூர் பேரூராட்சி மன்ற முன்னாள் துணைத் தலைவர் டி.குணா என்கிற குணசேகரன், திருக்கோவிலூர் நகர தி.மு.க. செயலாளர் கோபிகிருஷ்ணன், அரகண்டநல்லூர் நகர செயலாளர் சுந்தரமூர்த்தி, மாவட்ட சிறுபான்மை பிரிவு அக்பர் உள்பட பலர் உடன் இருந்தனர்.