4 மாதமாக நிரம்பி வழியும் சோலையாறு அணை
4 மாதமாக நிரம்பி வழியும் சோலையாறு அணை
வால்பாறை
வால்பாறையில் தொடர்மழை காரணமாக சோலையாறு அணை 4 மாதமாக நிரம்பி வழிகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
சோலையாறு அணை
வால்பாறையில் தென்மேற்கு பருவமழை போதியளவு கிடைத்து வருகிறது. இந்த ஆண்டு கடந்த ஜூன் மாதம் 3-ந் தேதி தொடங்கிய பருவமழை, ஆரம்பத்தில் குறைவாகவும் பின்னர் கனமழையாகவும் பெய்தது.
இதனால் பி.ஏ.பி. திட்ட அணைகளான சோலையாறு, கீழ்நீரார், மேல்நீரார் ஆகிய அணைகளுக்கு அதிகளவில் தண்ணீர் வந்தது. இதனால் இந்த அணைகள் நிரம்பி வழிந்தன. இதையடுத்து சோலையாறு அணையில் இருந்து ஒப்பந்தத்தின் அடிப்படையில் கேரளாவுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
4 மாதமாக நிரம்பி வழிகிறது
அதே நேரத்தில் மின் உற்பத்தி அதிகளவில் செய்யப்பட்டு மின் உற்பத்திக்கு பின்னர் சேடல்டேம் வழியாக தண்ணீர் முழுவதும் பரம்பிக்குளம் அணைக்கு வெளியேற்றப்பட்டது. பிறகு அங்கிருந்து பி.ஏ.பி. திட்ட அணைகளான ஆழியாறு, திருமூர்த்தி அணைகளுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
இந்த நிலையில் வால்பாறையில் உள்ள 160 அடி கொள்ளளவு கொண்ட சோலையாறு அணை கடந்த 4 மாதங்களாக நிரம்பி வழிந்து வருகிறது. அணையின் நீர்மட்டம் 160.66 அடியாக உள்ளது.
விவசாயிகள் மகிழ்ச்சி
அணைக்கு வினாடிக்கு 1,233 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து சேடல்டேம் வழியாக 1,199 கன அடி தண்ணீர் பரம்பிக்குளம் அணைக்கு வெளியேற்றப்பட்டு வருகிறது.
மேலும் வால்பாறையில் பனிக்காலம் தொடங்கிய நிலையில் வட கிழக்கு பருவமழை நின்று விடும். ஆனால் இந்த ஆண்டு பருவ மழை தாக்கம் காரணமாக அவ்வப்போது லேசான மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இதனால் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-
கூடுதல் மழை
வால்பாறையில் வழக்கமாக ஜூன் மாதம் தென்மேற்கு பருவ மழை தொடங்கும். அக்டோபர் மாதம் முதல்வாரத்தில் நின்று விடும். பின்னர் அதே மாதம் இறுதியில் வடகிழக்கு பருவமழை தொடங்கும். ஆனால் வடக்கிழக்கு பருவமழையால் வால்பாறை யில் அதிக மழை பெய்யாது.
ஆனால் எந்த காலத்திலும் இல்லாத வகையில் இந்த ஆண்டில் வடகிழக்கு பருவமழையும் பரவலாக பெய்வதால், அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. மேலும் கடந்த 3 ஆண்டுகளாக வழக்கத்துக்கு மாறாக கூடுதல் மழையும் கிடைத்து வருவது மகிழ்ச்சியாக இருக்கிறது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.