108 ஆம்புலன்ஸ் சேவையை அரசு ஏற்று நடத்த வேண்டும்

108 ஆம்புலன்ஸ் சேவையை அரசு ஏற்று நடத்த வேண்டும் என ஊழியர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

Update: 2021-11-19 17:02 GMT
திருவாரூர்;
108 ஆம்புலன்ஸ் சேவையை அரசு ஏற்று நடத்த வேண்டும் என  ஊழியர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. 
ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சங்க கூட்டம்
திருவாரூரில் 108 ஆம்புலன்ஸ் ஊழியர் சங்க மதுரை மண்டல அளவிலான வேலை நிறுத்தம் குறித்த ஆயத்த கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு திருவாரூர் மாவட்ட தலைவர் கல்யாணசுந்தரம் தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் ஆசைதம்பி முன்னிலை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் ராஜேந்திரன் பேசினார்.  மண்டல பொருளாளர் பாஸ்கரன், தஞ்சை மாவட்ட தலைவர் சண்முகசுந்தரம், மயிலாடுதுறை மாவட்ட தலைவர் தேவேந்திரன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முத்தமிழன், கும்பகோணம் மாவட்ட செயலாளர் செந்தில் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
உண்ணாவிரதம்
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு
பணி நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும். 108 ஆம்புலன்ஸ் சேவை முழுமையாக தனியாரிடம் ஒப்படைக்க கூடாது. அரசு தனியார் கூட்டாண்மை ஒப்பந்த முறையில் பராமரிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் இதை அரசு ஏற்று நடத்த வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி அடுத்த மாதம் (டிசம்பர்) 2-ந் தேதி நாமக்கல்லிலும், 8-ந் தேதி சென்னையிலும் உண்ணாவிரதம் நடத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும் செய்திகள்