தலைமறைவாக இருந்த கணவன்-மனைவி கைது

அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.14 லட்சம் மோசடி செய்ததாக கொடுக்கப்பட்ட புகாரில் தலைமறைவாக இருந்த கணவன்-மனைவியை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-11-19 16:41 GMT
மயிலாடுதுறை:-
அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.14 லட்சம் மோசடி செய்ததாக கொடுக்கப்பட்ட புகாரில் தலைமறைவாக இருந்த கணவன்-மனைவியை போலீசார் கைது செய்தனர்.
ரூ.14 லட்சம் மோசடி புகார்
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுகா விக்ரமசிங்கபுரம் தெற்கு அகஸ்தியர்புரம் பகுதியை சேர்ந்த பிச்சைமணி மகன் அருண்குமார்(வயது 36). இவருடைய மனைவி கிருஷ்ணகோகிலா(29). 
இவர்கள் இருவரும் அரசு வேலை வாங்கி தருவதாக மயிலாடுதுறையில் 7 பேரிடம் ரூ.14 லட்சம் வாங்கிக் கொண்டு தலைமறைவாகி விட்டதாக மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் திருவிழந்தூர் கே.கே. நகரை சேர்ந்த ராஜேந்திரன் மகன் சித்தார்த் (30) என்பவர் புகார் அளித்திருந்தார். 
தலைமறைவு
இந்த புகார் குறித்து மயிலாடுதுறை போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை மயிலாடுதுறை கூறைநாடு பி அண்டு டி நகரில் வசித்து வந்த தம்பதியினர், கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீரென வீட்டை காலி செய்து விட்டு தப்பி ஓடி சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தலைமறைவாக இருந்தது தெரியவந்தது.
கணவன்-மனைவி கைது
இதனையடுத்து மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணாசிங் உத்தரவின்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளையராஜா, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான தனிப்படை போலீசார் காரைக்குடி விரைந்து சென்றனர். காரைக்குடி அருணாசலம் தெருவில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்த அருண்குமார், கிருஷ்ணாகோகிலா தம்பதியினரை தனிப்படை போலீசார் கைது செய்து, நேற்று மயிலாடுதுறைக்கு கொண்டு வந்து, விசாரணை மேற்கொண்டனர். 
சென்னையில் அருண்குமார் மீது ஏற்கனவே மோசடி வழக்கு உள்ளதாகவும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 17 பேரிடம் ரூ.38 லட்சம் வரை ஏமாற்றி உள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்