முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு குறைப்பு
நீர்வரத்து குறைந்ததால் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது.
தேனி:
தமிழக-கேரள மாநில எல்லையில் உள்ள முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்ட உயரம் 152 அடி. இதில் 142 அடி வரை தண்ணீர் தேக்கிக்கொள்ள சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வந்த தொடர் மழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் நேற்று முன்தினம் அணையின் நீர்மட்டம் 141 அடியை எட்டியது. இதையடுத்து இடுக்கி மாவட்டத்துக்கு 2-வது கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. பின்னர் அணையில் இருந்து கேரள பகுதிக்கு இந்த ஆண்டில் 2-வது முறையாக உபரி நீர் திறக்கப்பட்டது. அந்த நீர் வல்லக்கடவு, வண்டிப்பெரியர் வழியாக இடுக்கி அணைக்கு சென்றது.
அணையில் இருந்து நேற்று முன்தினம் தமிழகத்துக்கு வினாடிக்கு 2 ஆயிரத்து 300 கன அடி வீதமும், கேரளாவுக்கு வினாடிக்கு 1,546 கன அடி வீதமும் நீர் திறக்கப்பட்டது. நேற்று அணைக்கு நீர்வரத்து குறைந்தது. காலையில் வினாடிக்கு 2 ஆயிரத்து 790 கன அடி வீதம் தண்ணீர் வந்த நிலையில், மாலை 4 மணியளவில் வினாடிக்கு 2 ஆயிரத்து 128 கன அடியாக நீர்வரத்து குறைந்தது. நீர்வரத்து குறைந்ததால் கேரளாவுக்கு திறக்கப்படும் நீர் அளவு வினாடிக்கு 128 கன அடியாகவும் தமிழகத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 2 ஆயிரம் கன அடியாகவும் குறைக்கப்பட்டது. அதேபோல் அணையின் நீர்மட்டமும் 140.80 அடியாக குறைந்தது.