வேட்டி-சட்டை அணிந்து ஆண்கள் தினம் கொண்டாடிய பணியாளர்கள்
வேட்டி-சட்டை அணிந்து ஆண்கள் தினத்தை போலீஸ் சூப்பிரண்டு அலுவலக பணியாளர்கள் கொண்டாடினர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வேலை செய்யும் ஆண் பணியாளர்கள் சார்பில் நேற்று ஆண்கள் தின விழா நடைபெற்றது. இதையொட்டி அலுவலக பணியாளர்கள் அனைவரும் தமிழர் பாரம்பரிய அடையாளமான வேட்டி, சட்டை அணிந்து வேலைக்கு வந்து அசத்தினர். இதையடுத்து அனைவரும் ஒன்றாக சேர்ந்து கேக் வெட்டி ஆண்கள் தினத்தை கொண்டாடினர்.
பின்னர் ஒருவருக்கு ஒருவர் இனிப்பு வழங்கியும், கைகுலுக்கியும் ஆண்கள் தின வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர். அப்போது போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசனும் கலந்து கொண்டு அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்தார். இதேபோல் பெண் பணியாளர்களும், சக ஆண் ஊழியர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். இதையடுத்து அனைவரும் குழுவாக புகைப்படம் எடுத்து கொண்டனர்.
திண்டுக்கல் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பணியாற்றும் ஆண்கள் அனைவரும் பேண்ட், சட்டை அணிந்து வருவது வழக்கம். ஆனால் நேற்று ஆண்கள் தின கொண்டாட்டத்துக்காக வேட்டி, சட்டை அணிந்து வந்ததால் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் வித்தியாசமாக காட்சி அளித்தது.