திருவள்ளூர் டோல்கேட் பகுதியில் கூட்டுறவு துறை சார்பில் 1,762 பேருக்கு நலத்திட்ட உதவிகள்
திருவள்ளூர் டோல்கேட் பகுதியில் கூட்டுறவு துறை சார்பில் மாவட்ட அளவிலான கூட்டுறவு வார விழா நடைபெற்றது.
இதற்கு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக பால்வளத்துறை அமைச்சரும், தி.மு.க.வின் திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளருமான ஆவடி சா.மு.நாசர் கலந்துகொண்டு 68-வது கூட்டுறவு வார விழா நிகழ்ச்சியை தொடங்கி வைத்து 1,762 பேருக்கு ரூ.14 கோடியே 6 லட்சம் மதிப்பில் கடன் உதவிகள் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதைத்தொடர்ந்து அமைச்சர் நாசர் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்பட்ட டிராக்டரை ஓட்டி பார்த்து ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் மாவட்ட அளவில் சிறந்த கூட்டுறவு சங்கங்களாக செயல்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம், தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி, பணியாளர் கூட்டுறவு கடன் சங்கம், தொடக்க கூட்டுறவு பண்டகசாலை, சிறந்த மத்திய கூட்டுறவு வங்கி, கூட்டுறவு கடன் சங்கம், தொழில் கூட்டுறவு சங்கம் உள்ளிட்ட 34 கூட்டுறவு சங்கங்களில் சிறப்பாக பணியாற்றிய கூட்டுறவு சங்கங்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து கேடயங்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் வி.ஜி.ராஜேந்திரன், ஆ.கிருஷ்ணசாமி, சுதர்சனம், சந்திரன், மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் உமா மகேஸ்வரி, கூட்டுறவு சங்கங்களின் இணைபதிவாளர் ஜெயஸ்ரீ, கூட்டுறவு சங்கங்களின் மேலாண்மை இயக்குனர் மலர்விழி, துணை பதிவாளர் விழா குழு உறுப்பினர் காத்தவராயன் மற்றும் கூட்டுறவு சங்க நிர்வாகிகள் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.