எட்டயபுரம் பகுதியில் பெய்த கனமழையால் 500 ஏக்கர் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன
எட்டயபுரம் பகுதியில் பெய்த கனமழையால் 500 ஏக்கர் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன
எட்டயபுரம்:
எட்டயபுரம் பகுதியில் பெய்த கனமழையால், 500 ஏக்கர் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்துள்ளனர். பாதிக்கப்பட்ட தங்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பயிர்கள் தண்ணீரில் மூழ்கின
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம், எட்டயபுரம் பகுதியில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக எட்டயபுரம் அருகே உள்ள மேலக்கரந்தை பகுதியில் இருக்கும் விவசாய நிலங்களில் மழைநீர் தேங்கியுள்ளது.
கடந்த 2 நாட்களுக்கும் மேலாக சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டு இருந்த மக்காச்சோளம், பாசி, உளுந்து, சோளம், குதிரைவாலி உள்ளிட்ட பயிர்கள் முற்றிலுமாக மழை நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன.
விவசாயிகள் பாதிப்பு
ஏற்கனவே 2 முறை மழை இல்லாமல் கடும் வறட்சியால் பயிர்கள் கருகி நிலையில், 3-வது முறையாக பயிரிட்ட செடிகள் நன்கு வளர்ந்த நிலையில், பலத்த மழையின் காரணமாக பயிர்கள் முற்றிலுமாக நீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளதால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த மழை நீர் வடிய இன்னும் 20 நாட்கள் வரை ஆகும் என்பதால் இந்தாண்டு தங்களுக்கு விவசாயம் பொய்த்துப் போய் விட்டதாக வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
அரசு நிவாரணம் வழங்க கோரிக்கை
எனவே பாதிக்கப்பட்ட தங்களுக்கு உடனடியாக அரசு நிவாரணத் தொகை மற்றும் பயிர் காப்பீட்டுத் தொகையை விரைந்து வழங்க நவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.