சிவன்மலையில் கார்த்திகை மகா தீபம்

கூடலூரில் உள்ள சிவன்மலையில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது. மேலும் கிரிவலம் சென்று பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

Update: 2021-11-19 13:59 GMT
கூடலூர்

கூடலூரில் உள்ள சிவன்மலையில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது. மேலும் கிரிவலம் சென்று பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

கார்த்திகை தீப விழா

நீலகிரி மாவட்டம் கூடலூரில் உள்ள சிவன்மலையில் மாதந்தோறும் பவுர்ணமி திருவிழா நடைபெறுவது வழக்கம். அப்போது பக்தர்கள் கிரிவலம் சென்று தரிசனம் செய்வார்கள். ஆனால் கடந்த பல மாதங்களாக கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகள் காரணமாக கிரிவலம் நடத்தப்படவில்லை. இருப்பினும் பவுர்ணமி நாளில் சிவனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் மட்டும் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் கூடலூர் சிவன்மலையில் கார்த்திகை பவுர்ணமி மற்றும் மகாதீப விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி காலை 6 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து கணபதி ஹோமம் உள்பட பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. 11 மணிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. 

கிரிவலம்

பின்னர் மாலை 4 மணிக்கு சிவன்மலையை பக்தர்கள் கிரிவலம் சென்று தரிசிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து மலையடிவாரத்தில் உள்ள விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் சிவலிங்கம், நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து மாலை 6 மணிக்கு மலை உச்சியில் வைக்கப்பட்டு இருந்த கொப்பரையில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது. 

அப்போது கூடியிருந்த பக்தர்கள் பக்தி கரகோஷமிட்டவாறு தரிசித்தனர். தொடர்ந்து பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர். இதேபோன்று கார்த்திகை மகா தீப திருநாளையொட்டி குசுமகிரி உள்பட அனைத்து முருகன் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

மேலும் செய்திகள்