குறைதீர்க்கும் கூட்டத்தை புறக்கணித்த விவசாயிகள்
கலெக்டர் வராததால் குறைதீர்க்கும் கூட்டத்தை விவசாயிகள் புறக்கணித்தனர். இதனால் ஊட்டியில் பரபரப்பு ஏற்பட்டது.
ஊட்டி
கலெக்டர் வராததால் குறைதீர்க்கும் கூட்டத்தை விவசாயிகள் புறக்கணித்தனர். இதனால் ஊட்டியில் பரபரப்பு ஏற்பட்டது.
கலெக்டர் வரவில்லை
ஊட்டி கலெக்டர் அலுவலக கூடுதல் வளாக அரங்கில் நேற்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுவதாக இருந்தது. கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக ஊட்டி, குன்னூர், கூடலூர், கோத்தகிரி, குந்தா, பந்தலூர் ஆகிய தாலுகாக்களை சேர்ந்த விவசாயிகள் வந்தனர்.
காலை 10.30 மணிக்கு கூட்டம் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது.
இருப்பினும் மதியம் 12 மணி வரை கூட்டம் தொடங்கவில்லை. மேலும் கலெக்டர் உள்பட சில அதிகாரிகள் வரவில்லை என்று தெரிகிறது. இதனால் வெகு நேரம் காத்திருந்த விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தை புறக்கணித்து விட்டு வெளியே வந்தனர். அவர்களிடம், கலெக்டர் சிறிது நேரத்தில் வந்துவிடுவார், அரங்கில் அமருங்கள் என்று அதிகாரிகள் கூறினர்.
பரபரப்பு
இருப்பினும் விவசாயிகள் பல்வேறு தோட்ட பணிகளை விட்டுவிட்டு நாங்கள் வந்து உள்ளோம். தொலைதூரங்களில் இருந்து வருவதால் எங்களது வேலைகள் பாதிக்கப்படுகிறது என்று கூறி வெளியே வந்துவிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் மாதந்தோறும் 3-வது வெள்ளிக்கிழமை நடந்து வருகிறது. அனைத்து துறை அரசு அதிகாரிகள் கலந்துகொள்வதால் எங்களது கோரிக்கைகளை முன்வைத்து தீர்வு காண வாய்ப்பு உள்ளது. நாங்கள் வெகு நேரம் காத்திருந்தும் கலெக்டர் வராததால் கூட்டத்தை புறக்கணித்தோம்.
தீர்வு காண வேண்டும்
கூட்டம் நடைபெறும் சில நாட்களுக்கு முன்பு கோரிக்கை மனுக்களை தபாலிலோ அல்லது மின்னஞ்சல் மூலமோ அனுப்புகிறோம். அதற்கு உரிய அதிகாரிகள் பதில் அளிக்காமல் இருந்து வருகின்றனர். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பதிலளித்தால் பயனுள்ளதாக இருக்கும்.
கேத்தி பாலாடாவில் இருந்து பிரகாசபுரம் செல்லும் கால்வாய் தூர்வாரப்படாமல் உள்ளதால், வெள்ளப்பெருக்கின்போது விளைநிலங்களுக்குள் தண்ணீர் புகும் அபாயம் இருக்கிறது. எனவே அதை தூர்வார வேண்டும். அதேபோல் ஒவ்வொரு பகுதிகளிலும் விவசாயிகள் பிரச்சினைகளை அறிந்து, தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.