ஆதிச்சநல்லூர் அகழாய்வில் கண்டறியப்பட்ட முதுமக்கள் தாழியை கனிமொழி எம்பி முன்னிலையில் திறந்து பார்வையிட்டனர்
ஆதிச்சநல்லூர் அகழாய்வில் கண்டறியப்பட்ட முதுமக்கள் தாழியை கனிமொழி எம்பி முன்னிலையில் திறந்து பார்வையிட்டனர்
ஸ்ரீவைகுண்டம்
ஆதிச்சநல்லூர் அகழாய்வில் கண்டறியப்பட்ட முதுமக்கள் தாழியை கனிமொழி எம்.பி. முன்னிலையில் திறந்து பார்வையிட்டனர்.
அகழாய்வு பணி
பண்டைய தமிழர்களின் நாகரிக தொட்டிலாக விளங்கும் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே ஆதிச்சநல்லூர் பரும்பு பகுதியில் மத்திய அரசின் தொல்லியல துறை சார்பில் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. மத்திய தொல்லியல் துறை திருச்சி மண்டல இயக்குனர் அருண்ராஜ் தலைமையிலான குழுவினர் அகழாய்வு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இங்கு 10-க்கும் மேற்பட்ட இடங்களில் குழி தோண்டி அகழாய்வு நடைபெற்று வருகிறது. இதில் 12 முதுமக்கள் தாழிகள், ஏராளமான மண்பாண்ட பொருட்கள், பழங்கால மக்களின் வாழ்விட பகுதிகள் போன்றவை கண்டறியப்பட்டது.
முதுமக்கள் தாழி திறப்பு
இந்த நிலையில் ஆதிச்சநல்லூர் பரும்பு பகுதியில் நடைபெற்று வரும் அகழாய்வு பணிகளை கனிமொழி எம்.பி., மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் ஆகியோர் நேற்று பார்வையிட்டனர். அவர்களுக்கு அகழாய்வு பணிகள் குறித்து தொல்லியல் துறை இயக்குனர் விளக்கம் அளித்தார்.
தொடர்ந்து அகழாய்வில் கண்டறியப்பட்ட முதுமக்கள் தாழியை தொல்லியல் துறையினர் திறந்து பார்த்தனர். அதில், பழங்கால மனிதரின் மண்டை ஓடு உள்ளிட்ட எலும்புகள், நெல்மணிகள், உணவு தானியங்கள், பழங்கால மக்கள் பயன்படுத்திய சிறிய மண்பாண்ட பொருட்கள், கிண்ணங்கள் போன்றவையும் இருந்தன. அவற்றை கனிமொழி எம்.பி., கலெக்டர் செந்தில்ராஜ் ஆகியோர் பார்வையிட்டனர். ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் ராதாகிருஷ்ணன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
6 மாதம் தொடரும்
இதுகுறித்து தொல்லியல் துறையினர் கூறுகையில், ‘கடந்த 2004-ம் ஆண்டுக்கு பிறகு ஆதிச்சநல்லூரில் மத்திய அரசின் சார்பில் மீண்டும் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. இங்கு முதுமக்கள் தாழிகள், மண்பாண்ட பொருட்கள் போன்றவை கண்டறியப்பட்டு உள்ளன. அகழாய்வு பணிகள் இன்னும் 6 மாதம் வரையிலும் நடைபெறும்’ என்று தெரிவித்தனர்.