தூத்துக்குடி அருகே பி எட் மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்
தூத்துக்குடி அருகே பி எட் மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்
ஸ்பிக்நகர்:
தூத்துக்குடி அருகே பி.எட்.மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பி.எட்.மாணவி
தூத்துக்குடி முத்தையாபுரம் அருகே உள்ள அபிராமி நகரை சேர்ந்தவர் மாணிக்கராஜ். இவருடைய மகள் சோனிகா (வயது 22). இவர் பாளையங்கோட்டையில் உள்ள ஒரு கல்லூரியில் பி.எட். படித்து வந்தார். மழையின் காரணமாக கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளதால் அவரது அப்பா மாணிக்கராஜ், சோனிகாவை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். நேற்று காலையில் மாணிக்கராஜா தூத்துக்குடிக்கு சென்றார். மதியம் 3 மணிக்கு அவர் வீட்டிற்கு திரும்பியபோது, குடும்பத்தினர் அனைவரும் சாப்பிடாமல் இருந்துள்ளனர். அனைவரும் ஏன் சாப்பிடாமல் இருந்தீர்கள்? என அவர் கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் சோனிகாவிற்கு வயிற்று வலி உள்ளதாக கூறி ரூமில் தூங்க சென்றுள்ளார். நீங்கள் வந்த பின்பு அனைவரும் சேர்ந்து சாப்பிடலாம் என்று இருக்கிறோம் என்று கூறினர்.
தூக்கில் தொங்கினார்
உடனே அவர் சோனிகாவை சாப்பிடுவதற்கு அழைக்க அவரது ரூமுக்கு சென்றார். அப்போது அவரது ரூம் கதவு உள்பக்கம் பூட்டப்பட்டிருந்தது. மாணிக்கராஜ் கதவை தட்டியும் கதவு திறக்கப்படவில்லை. நீண்ட நேரம் தட்டியும் திறக்காததால் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றனர். அப்போது அங்கு சோனிகா சேலையால் தூக்குப்போட்டு தொங்கிய நிலையில் இருந்துள்ளார். இதனை கண்டு பதறிப்போன குடும்பத்தினர் உடனடியாக சோனிகாவை மீட்டு தூத்துக்குடியில் ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
போலீசார் விசாரணை
அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர், மேல் சிகிச்சைக்காக அவரை தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் முத்தையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.