காஞ்சீபுரத்தில் கொட்டி தீர்த்த மழை

காஞ்சீபுரம் நகரில் கனமழை பெய்து வரும் நிலையில் அடைப்புகளை சரிசெய்யும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Update: 2021-11-19 12:47 GMT
பலத்த மழை

வங்க கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் தொடர்மழை பெய்து வருகிறது.

காஞ்சீபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று காலை முதல் இடியுடன் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது.

267 ஏரிகள் நிரம்பின

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடித்து பொதுமக்கள் அனைவரும் தங்கள் உடைமைகளையும் தங்களையும் பாதுகாத்து கொள்ளுமாறு மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி கேட்டு கொண்டார்.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் 381 ஏரிகளில் 267 ஏரிகள் தனது முழு கொள்ளளவை எட்டி கடல் போல் காட்சியளித்து வருகிறது. மேலும் பாலாறு மற்றும் செய்யாறுகளில் கனமழையின் காரணமாக தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

காஞ்சீபுரம் நகரில் பஸ் நிலையம், மேட்டுத்தெரு, ரெயில்வே சாலை, ரங்கசாமிகுளம், செட்டித்தெரு மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி ஆறு போல் ஓடி கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் நகரின் பல்வேறு பகுதிகளில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் மழைநீர் கால்வாய்களில் உள்ள அடைப்புகளை நீக்கி, குப்பை கழிவுகளை விரைந்து அப்புறப்படுத்தும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.

இந்த தொடர் கனமழையால் காஞ்சீபுரம் பகுதிகளில் சிறு வியாபாரிகள் பாதிப்படைந்துள்ளனர்.

பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள், மிகுந்த சிரமத்துடன் வாகனங்களை ஓட்டி செல்கின்றனர்.

மேலும் செய்திகள்