போலீசாரை தாக்கி விட்டு தப்பிய வாலிபர் அசாம் மாநிலத்தில் சிக்கினார்

சிறையில் அடைக்க சென்ற போது போலீசாரை தாக்கி விட்டு தப்பிய வாலிபர் அசாம் மாநிலத்தில் சிக்கினார்

Update: 2021-11-18 21:21 GMT
மதுரை
மதுரை தமுக்கம் பகுதியில் உள்ள பிரபல ஓட்டலில் மடிக்கணினி, 2 செல்போன்கள் போன்றவை கடந்த செப்டம்பர் மாதம் திருட்டு போனது. இதுகுறித்து ஓட்டல் மேலாளர் தல்லாகுளம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் மர்மநபர் ஒருவர் ஓட்டலை மூடியபிறகு பின்வாசல் வழியாக உள்ளே நுழைந்து அங்கிருந்த பொருட்களை திருடியது கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. மேலும் போலீசார் நடத்திய தொடர் விசாரணையில் அந்த ஓட்டலில் வேலை பார்த்த அசாம் மாநிலத்தை சேர்ந்த கணேஷ்முண்டா(வயது 27) திருடியது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே போலீசார் அவரை கைது செய்து தேனி சிறையில் அடைத்தனர்.
சிறையில் இருந்து அவரை அக்டோபர் மாதம் வழக்கு விசாரணைக்காக மதுரை கோர்ட்டு போலீசார் அழைத்து வந்தனர். பின்னர் மீண்டும் சிறைக்கு கொண்டு செல்லும் போது கணேஷ்முண்டா மதுரை போலீசாரை கற்களால் தாக்கி விட்டு தேனியில் இருந்து தப்பி விட்டார். அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
தப்பி ஓடியவரை உடனே பிடிக்க போலீஸ் கமிஷனர் பிரேம்ஆனந்த்சின்கா உத்தரவிட்டார். அதன் பேரில் தல்லாகுளம் குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு அவரை தேடி வந்தனர். அப்போது கணேஷ்முண்டா அவரது அசாமில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் கடந்த மாதம் 12-ந் தேதி மதுரையில் இருந்து அசாம் மாநிலத்திற்கு சென்றனர். அங்கு அம்மாநில போலீசார் உதவியுடன் கடந்த ஒரு மாதத்திற்கு மேல் அங்கேயே தங்கி அவரை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று கணேஷ்முண்டா பதுங்கியிருந்த இடத்தை கண்டுபிடித்து தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
பின்னர் கணேஷ்முண்டாவை அங்குள்ள கோர்ட்டில் ஆஜர்படுத்தி மதுரைக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை தனிப்படை போலீசார் செய்து வருகிறார்கள். அசாம் மாநிலம் சென்று தப்பியோடியவரை கண்டு பிடித்து கைது செய்த தனிப்படை போலீசாரை போலீஸ் கமிஷனர் பிரேம்ஆனந்த்சின்கா பாராட்டினார்.

மேலும் செய்திகள்