ஓடும் ரெயிலில் செல்பி எடுத்தபோது ஆற்றில் தவறி விழுந்த வாலிபர் பலி
ஸ்ரீரங்கப்பட்டணாவில் ஓடும் ரெயிலில் செல்பி எடுத்தபோது ஆற்றில் தவறி விழுந்து பலியான வாலிபரின் உடல் 5 நாட்களுக்கு அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
பெங்களூரு:ஸ்ரீரங்கப்பட்டணாவில் ஓடும் ரெயிலில் செல்பி எடுத்தபோது ஆற்றில் தவறி விழுந்து பலியான வாலிபரின் உடல் 5 நாட்களுக்கு அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
செல்பி எடுத்தபோது...
கர்நாடக மாநிலம் மண்டியாவை சேர்ந்தவர் அபிஷேக் (வயது 19). இவர் பெங்களூரு காந்திநகரில் உள்ள ஒரு மதுபான விடுதியில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் கடந்த 6-ந்தேதி அபிஷேக் தனது சொந்த ஊரான மண்டியாவுக்கு பெங்களூருவில் இருந்து ரெயிலில் சென்றுள்ளார். அப்போது மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா அருகே லோகபவானி ஆற்றுப்பாலத்தில் ரெயில் சென்றுள்ளது.
அந்த சமயத்தில் ரெயில் பெட்டியின் கதவு அருகே நின்றிருந்த அபிஷேக் தனது செல்போனில் ஆற்றுப்பாலத்துடன் செல்பி புகைப்படம் எடுக்க முயன்றுள்ளார். இதில் அவர் தவறி ஆற்றில் விழுந்துள்ளார். தொடர் மழையால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார்.
அழுகிய நிலையில் உடல் மீட்பு
ஆனால் இதுபற்றி முதலில் யாருக்கும் தெரியவில்லை. அதனால் அபிஷேக்கின் பெற்றோர் அபிஷேக் மாயமாகிவிட்டதாக பெங்களூரு உப்பார்பேட்டை போலீசில் புகாார் அளித்தனர். அதன்பேரில் உப்பார்பேட்டை போலீசார், மண்டியா ரெயில்வே போலீசார் அபிஷேக் பயணம் செய்த ரெயில் விவரம் மற்றும் அந்த ரெயிலில் பயணம் செய்த பயணிகளிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது தான் அபிஷேக் செல்பி எடுத்த போது இரும்பு பாலத்தில் மோதி ஆற்றில் தவறி விழுந்தது தெரியவந்தது.
இதையடுத்து அவரது உடலை தேடும் பணியில் போலீசாரும், தீயணைப்பு படையினரும் ஈடுபட்டனர். ஆனால் 5 நாட்கள் தேடியும் அவரது உடல் கிடைக்கவில்லை. இருப்பினும் அவரது உடலை தேடும் பணி தொடர்ந்து நடந்தது. இந்த நிலையில் நேற்று சம்பவ இடத்தில் இருந்து 7 கிலோ மீட்டர் தூரத்தில் அபிஷேக்கின் உடல் அழுகிய நிலையில் கிடந்தது. அதனை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக போலீசார் ஸ்ரீரங்கப்பட்டணா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.