அரசு பஸ் பணிமனையில் போக்குவரத்து அதிகாரி தூக்குப்போட்டு தற்கொலை

கல்கட்டகி அரசு பஸ் பணிமனையில் போக்குவரத்து அதிகாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். அவர் எழுதிய உருக்கமான கடிதம் போலீசாரிடம் சிக்கி உள்ளது.;

Update: 2021-11-18 20:57 GMT
உப்பள்ளி: கல்கட்டகி அரசு பஸ் பணிமனையில் போக்குவரத்து அதிகாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். அவர் எழுதிய உருக்கமான கடிதம் போலீசாரிடம் சிக்கி உள்ளது. 

இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

தற்கொலை

தார்வார் மாவட்டம் உப்பள்ளி நகரை சேர்ந்தவர் சுபாஷ் (வயது 56). இவர் கல்கட்டகி டவுனில் உள்ள கே.எஸ்.ஆர்.டி.சி. (அரசு) பஸ் பணிமனையில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் போக்குவரத்து அதிகாரியான சுபாஷ், நேற்று காலை வழக்கம் போல வேலைக்கு சென்றார். இந்த நிலையில் தனது அறையில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். 

இந்த நிலையில் வெளியே சென்றிருந்த சக ஊழியர்கள் திரும்பி வந்தபோது, சுபாஷ் மின்விசிறியில் தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். 

கடிதம் சிக்கியது

இதுகுறித்து கல்கட்டகி போலீசாருக்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் போலீசார், தற்கொலை செய்துகொண்ட சுபாசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 
இதற்கிடையே, சுபாஷ் தற்கொலை செய்துகொண்ட அறையில் இருந்து அவர் எழுதிய கடிதம் ஒன்று போலீசாரிடம் சிக்கியது. 

சக ஊழியர்கள் தொல்லை

அந்த கடிதத்தில், ‘போக்குவரத்து துறையில் என்னுடன் பணியாற்றுபவர்கள் எனக்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. அவர்கள் எனக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வருகிறார்கள். அவர்களின் தொல்லை தாங்க முடியாமல் தற்கொலை செய்துகொள்கிறேன்’ என்று உருக்கமாக எழுதியிருந்தார். 

சக ஊழியர்களின் தொல்லையால் சுபாஷ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து கல்கட்டகி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்