போலீஸ் பணி நியமனங்களில் காலதாமதம் ஏன்; அரசுக்கு, ஐகோர்ட்டு கேள்வி

கர்நாடகத்தில் போலீஸ் பணி நியமனங்களில் கால தாமதம் ஏன்? என்று அரசுக்கு கர்நாடக ஐகோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது.

Update: 2021-11-18 20:35 GMT
பெங்களூரு:கர்நாடகத்தில் போலீஸ் பணி நியமனங்களில் கால தாமதம் ஏன்? என்று அரசுக்கு கர்நாடக ஐகோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது.

5,602 பணி இடங்கள் காலி

கர்நாடகத்தில் போலீஸ் துறையில் 1,142 சப்-இன்ஸ்பெக்டர் பணி இடங்கள் மற்றும் 4,460 போலீஸ்காரர்களுக்கான பணி இடங்கள் காலியாக உள்ளன. அந்த பணி இடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று அரசுக்கு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். 

அதே நேரத்தில் மாநிலத்தில் போலீஸ் துறையில் ஒட்டு மொத்தமாக காலியாக உள்ள 5,602 பணி இடங்கள் நிரப்பப்படாமல் இருப்பது குறித்து கர்நாடக ஐகோர்ட்டு சுயமாக பொதுநல வழக்கு தொடர்ந்து விசாரணை மேற்கொண்டது.

இந்த வழக்கு விசாரணை கர்நாடக ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி முன்னிலையில் நடைபெற்று வருகிறது. அந்த வழக்கு தொடர்பான விசாரணை நேற்று நீதிபதி முன்னிலையில் நடைடெபற்றது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் போலீஸ் துறையில் காலியாக உள்ள பணி இடங்களை நிரப்ப அரசுக்கு காலஅவகாசம் வழங்க வேண்டும் என்று வாதிட்டார்.

பிரமாண பத்திரம்...

மேலும் போலீஸ் துறையில் காலியாக உள்ள பணி இடங்களை உடனடியாக நிரப்ப சாத்தியமில்லை, அடுத்த ஆண்டு (2022) ஜூலை மாதம் வரை காலஅவகாசம் வழங்க வேண்டும் என்று அரசு வக்கீல் கேட்டுக் கொண்டார். இதற்கு தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். போலீஸ் பணி நியமனங்களில் காலதாமதம் ஏன் என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். மேலும் போலீஸ் துறையில் காலியாக உள்ள பணி இடங்களை நிரப்ப 8 மாதங்களுக்கும் மேல் காலஅவகாசம் கேட்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. அந்த பணி இடங்களை உடனடியாக நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அந்த பணி இடங்களை நிரப்பும் விவகாரம் குறித்து இன்னும் ஒரு வாரத்திற்குள் அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்று அரசுக்கு, தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி உத்தரவு பிறப்பித்தார். இந்த வழக்கின் விசாரணையை அடுத்த வாரத்திற்கு தள்ளி வைத்தும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்