விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பினர் கலெக்டரிடம் மனு
நெல்லையில் விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பினர் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
நெல்லை:
தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பினர் ஒருங்கிணைப்பாளர் டி.எஸ்.ஏ.சுப்பிரமணியன் தலைமையில் நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணுவை சந்தித்து மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:-
இந்தியாவில் விவசாயத்திற்கு அடுத்த மிகப்பெரிய தொழிலான ஜவுளித்துறையில் 2-வது இடத்தில் இருக்கும் தமிழகத்தில் 6 லட்சம் விசைத்தறிகள் உள்ளன. நாட்டின் துணித்தேவையில் 60 சதவீதத்தை சாதாரண விசைத்தறிகள் பூர்த்தி செய்கின்றன. கடந்த டிசம்பர் மாதம் முதல் தற்போது வரை ஜவுளி உற்பத்திக்கு தேவையான நூல் விலை முன்பு இருந்த விலையை விட 50 சதவீதம் முதல் 60 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.
பஞ்சின் விலை குறைவாகவே இருந்த போதிலும், பஞ்சு, நூல் ஆகியவற்றை ஏற்றுமதி செய்து செயற்கையான தட்டுப்பாட்டை உண்டாக்கி அவ்வப்போது நூல் விலையை உயர்த்தி வருகின்றன. இதுதொடர்பாக ஏற்கனவே நூல் விலை நிர்ணய குழு அமைத்து நூல் விலையை கட்டுப்படுத்த வேண்டி இருந்தோம்.
தற்போது தாறுமாறாக உயர்ந்துள்ள நூல் விலை உயர்வினால் ஜவுளி தொழில் முடங்கிப்போகும் நிலையில் உள்ளது. எனவே அரசு உடனடியாக தலையிட்டு நூல் உற்பத்தியாளர்கள், எங்களை போன்ற நூல் உபயோகிப்போர் சங்கங்கள், அரசு தரப்பு அதிகாரிகள் என முத்தரப்பு குழு அமைத்து, அதன்மூலம் நூல் விலையை நிர்ணயம் செய்து நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதேபோல் சங்கரன்கோவில் நூல் உபயோகிப்போர் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் சுப்பிரமணியன், செயலாளர் சுப்பிரமணியன், பொருளாளர் முத்து சங்கரநாராயணன் உள்ளிட்டோர் தென்காசி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.