நெல்லையில் ஆதித்தமிழர் பேரவையினர் ஆர்ப்பாட்டம்
நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் ஆதித்தமிழர் பேரவையினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நெல்லை:
நெல்லை கலெக்டர் அலுவலகம் முன்பு ஆதித்தமிழர் பேரவை சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாளையங்கோட்டையில் உள்ள அம்பேத்கர் நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு மிகவும் பழுதடைந்து உள்ளது என்று கூறி அனைத்து குடும்பங்களையும் காலி செய்யுமாறு கூறுகிறார்கள். ஆனால் அங்குள்ள மக்கள் குடியிருப்பதற்கு மாற்று இடம் வழங்கவில்லை. எனவே மாற்று இடம் வழங்க வேண்டும். குறிப்பாக அருகில் உள்ள மாநகராட்சி இடத்தில் அரசு சார்பில் தற்காலிக குடியிருப்புகள் அமைத்து தர வேண்டும் என்று வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் கலைகண்ணன் தலைமை தாங்கினார். இதில் வக்கீல் அணி மாநில துணை செயலாளர் இளமாறன் கோபால், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் மணிமாறன், தகவல் தொழில்நுட்ப அணி குருராஜ், மாவட்ட அமைப்பு செயலாளர் தமிழ்வாணன், மகளிர் அணி செயலாளர் மகேஸ்வரி, தூய்மை தொழிலாளர் பேரவை மாவட்ட செயலாளர் ஹாண்டா ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் கோரிக்கை தொடர்பாக கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.