விடிய, விடிய கொட்டித்தீர்த்த கன மழை

கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பலத்த காற்றுடன் விடிய, விடிய கன மழை கொட்டித்தீர்த்தது. இதில் வடலூர் அருகே பள்ளி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்து தரைமட்டமானது.

Update: 2021-11-18 20:05 GMT
கடலூர், 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் கடலூர் மாவட்டத்தில் கடந்த வாரம் கனமழை பெய்தது. மழையால் குளம், குட்டைகள், ஏரிகள் நிரம்பின. ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பயிர்ச்சேதம் ஏற்பட்டது. பல இடங்களில் வீடுகளும் இடிந்து விழுந்து சேதம் அடைந்தன. அதன் பிறகு மழை ஓய்ந்ததால் தேங்கியிருந்த மழைநீர் வடிந்து வந்தது. 
இந்நிலையில் தெற்கு, கிழக்கு வங்க கடல் மற்றும் தென் மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி, தாழ்வு மண்டலமாக மாறியது. தொடர்ந்து புயல் சின்னமாக மாறியது.

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

இது மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து வட தமிழகம்-தெற்கு ஆந்திரா இடையே கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாகவும், இதன் காரணமாக இன்று (வெள்ளிக்கிழமை) காலை வரை தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை தெற்கு ஆந்திரா, நெல்லூர், ஓங்கோல் வரை கன முதல் மிக கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
இதையொட்டி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம், சேலம், செங்கல்பட்டு, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டது. இதனால் கடலூர் மாவட்டத்தில் நேற்று பள்ளி, கல்லூரிகளுக்கு ஒரு நாள் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் உத்தரவிட்டிருந்தார்.

விடிய, விடிய மழை

இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு 12 மணிக்கு தொடங்கிய மழை விடிய, விடிய கொட்டித் தீர்த்தது. நேற்றும் மழை நீடித்தது. இந்த மழை பலத்த காற்றுடன் விடாமல் பெய்தது. மதியம் 2 மணி வரை மழை கொட்டித்தீர்த்தது. இந்த கனமழையால் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது. சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
கடலூர் நேதாஜி ரோடு, சில்வர் பீச் ரோடு, கடலூர்- சிதம்பரம் சாலை, கான்வென்ட் ரோடு, நீதிபதிகள் குடியிருப்பு சாலை, தேவனாம்பட்டினம் சாலை உள்ளிட்ட பல்வேறு சாலைகளில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கி நின்றது. அதில் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரிய விட்டபடி சென்றனர்.
குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்தது
மஞ்சக்குப்பம் மைதானம், செம்மண்டலம் மாரியம்மன்கோவில் தெரு, அண்ணா விளையாட்டு மைதானம், கே.கே.நகர், புதுப்பாளையம், வன்னியர் பாளையம், வண்ணாரப்பாளையம், குண்டுஉப்பலவாடி, வி.பி.ஆர்.நகர், பத்மாவதிநகர், கூத்தப்பாக்கம், பாதிரிக்குப்பம் உள்ளிட்ட தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது.
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பான்பரி மார்க்கெட் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் தண்ணீர் தேங்கி நின்றதை பார்க்க முடிந்தது.
இதேபோல் சிதம்பரம், பண்ருட்டி, விருத்தாசலம், அண்ணாமலைநகர், காட்டுமன்னார்கோவில், லால்பேட்டை, தொழுதூர் உள்பட மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களிலும் மழை கொட்டித்தீர்த்தது. இந்த மழையினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. 
மேலும் மாவட்டத்தில் 10 ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட நிலப்பரப்பில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கியது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். 

பள்ளி கட்டிடம் இடிந்தது

வடலூர் அருகே வானதிராயபுரத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. விடிய, விடிய கொட்டித்தீர்த்த கனமழையால் பள்ளி வகுப்பறை கட்டிடம் நேற்று அதிகாலை 5.30 மணிக்கு திடீரென இடிந்து விழுந்து தரைமட்டமானது. 
பள்ளிக்கட்டிடம் அதிகாலையிலேயே இடிந்து விழுந்ததாலும், நேற்று பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்ததாலும் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. 
இது பற்றி தகவல் அறிந்த சபா.ராஜேந்திரன் எம்.எல்.ஏ. சம்பவ இடத்துக்கு சென்று இடிந்து விழுந்த பள்ளி கட்டிடத்தை பார்வையிட்டார். பின்னர் அவர் அங்கிருந்த மக்களிடம், புதிய வகுப்பறை கட்டிடம் கட்ட உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அப்போது தாசில்தார் சையது அபுதாஹிர், மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் மற்றும் நெய்வேலி தொகுதி பேரிடர் கால பொறுப்பு அலுவலர் உதயகுமார், ஊராட்சி மன்ற தலைவர் வைத்தியநாதன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுப்பிரமணியன், சதீஷ் பாபு மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர். 

கிராம நிர்வாக அலுவலக கட்டிடம்

இதேபோல் விருத்தாசலம் அடுத்த குப்பநத்தம் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலக கட்டிடத்தின் மேற்கூரையின் சிமெண்டு காரை பெயர்ந்து கீழே விழுந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த கிராம நிர்வாக அலுவலர், கிராம உதவியாளர்கள் மற்றும் பொதுமக்கள் அலுவலகத்தில் இருந்து அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடிவந்தனர். இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை. இதேபோல் நெல்லிக்குப்பத்தில் கனமழையால் மின்கம்பம் சாய்ந்து விழுந்ததால், அப்பகுதியில் மின்தடை ஏற்பட்டது. 
பெண்ணாடம் அடுத்த பெ.பொன்னேரி கிராமத்தை சேர்ந்த ரமேஷ் என்பவருக்கு சொந்தமான 2 மாடு வெள்ளாற்று மழை வெள்ளத்தில் சிக்கியது. இதையடுத்து அந்த மாடுகளை தீயணைப்புத்துறையினர் மீட்டனர்.  குமராட்சி அருகே ஒற்றப்பாளையம் பகுதியில் கொள்ளிடக்கரையோரம் இருந்த பழமை வாய்ந்த ஆலமரம் வேரோடு சாய்ந்து விழுந்தது. இதனால் அங்குள்ள சாலை சேதமடைந்தது.

போக்குவரத்து பாதிப்பு

மேலும் மழையால் திட்டக்குடி அடுத்த பட்டூர் அருகே சாலையோரத்தில் இருந்த புளிய மரம் ஒன்று வேரோடு சாய்ந்து நடுரோட்டில் விழுந்தது. இதனால் திட்டக்குடி- விருத்தாசலம் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்த தகவலின் பேரில் நெடுஞ்சாலை துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மரத்தை வெட்டி அகற்றினர். இருப்பினும் நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தொழுதூரில் 67 மில்லி மீட்டர் மழை பெய்தது. 

விழுப்புரம்

விழுப்புரத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. தாழ்வான பகுதிகளில் உள்ள 200-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை சுற்றிலும் தண்ணீர் சூழ்ந்துள்ளது. தொடர்ந்து மதியம் 1 மணிக்கு மழை சற்று ஓய்ந்த நிலையில் மாலை 3 மணிக்கு மேல் மீண்டும் கனமழை பெய்யத்தொடங்கியது. 
இந்த மழையினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. இதற்கிடையே கனமழையால் திண்டிவனம் ரெயில்வே பாலத்தின் கீழ் பகுதியில் தேங்கிய மழைவெள்ளத்தில் அரசு பஸ் ஒன்று சிக்கியது. டிரைவரால் மேற்கொண்டு பஸ்சை இயக்க முடியவில்லை. இருப்பினும் பஸ்சில் இருந்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். 

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தை பொறுத்தவரை நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு தொடங்கிய மழையானது விடிய விடிய சாரல் மழையாகவும், கனமழையாகவும் கொட்டித்தீர்த்தது. தொடர்ந்து காலை 6 மணி முதல் காலை 11 மணி வரை விட்டுவிட்டு பெய்த மழை, அதன் பிறகு மதியம் 12 மணி வரை பலத்த காற்றுடன் வெளுத்து வாங்கியது. இதனால் நகரில் தாழ்வான குடியிருப்பு பகுதிகள் மற்றும் சாலைகளில் மழைநீர் தேங்கியது. ஓரீரு இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
உளுந்தூர்பேட்டை, சங்கராபுரம், திருக்கோவிலூர், கல்வராயன்மலை உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று மாலை வரை பரவலாகவும், இடை இடையே கனமழையாகவும் கொட்டித்தீர்த்தது. சில இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் கோமுகி, மணிமுக்தா அணை உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

மேலும் செய்திகள்