திருவையாறில் அரசு பள்ளி ஆசிரியை வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகைகள் கொள்ளை மர்ம நபர்கள் கைவரிசை
திருவையாறில், அரசு பள்ளி ஆசிரியை வீட்டின் பூட்ைட உடைத்து 15 பவுன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்று விட்டனர்.
திருவையாறு:-
திருவையாறில், அரசு பள்ளி ஆசிரியை வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்று விட்டனர்.
அரசு பள்ளி ஆசிரியை
தஞ்சையை அடுத்த திருவையாறு பாவாசாமி அக்ரஹாரத்தில் வசித்து வருபவர் கணேசன்(வயது 46). டிரைவரான இவர், ஆயுர்வேத மருந்துகள் விற்பனையும் செய்து வருகிறார்.
இவரது மனைவி ராஜேஸ்வரி(41). இவர், தஞ்சை கீழப்புனவாசல் ஆதிதிராவிடர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.
பூட்டு உடைக்கப்பட்டு...
கணேசனின் அக்கா ஊட்டியில் வசித்து வருகிறார்.. அங்கு அவரது மாமியார் இறந்து விட்டதாக தகவல் கிடைத்ததையடுத்து கணேசன் தனது குடும்பத்துடன் ஊட்டிக்கு சென்று இருந்தார்.
நேற்று காலையில் அவர்கள் வீட்டுக்கு திரும்பி வந்தனர். அப்போது வீட்டில் இரு சக்கர வாகனம் நிறுத்தும் இடத்தில் உள்ள கதவின் பூட்டு உள்பட அனைத்து கதவுகளிலும் பூட்டி இருந்த பூட்டுகள் உடைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது.
15 பவுன் நகைகள் கொள்ளை
இதனால் அதிர்ச்சி அடைந்த கணேசன்-ராஜேஸ்வரி தம்பதியினர் வீட்டிற்கு உள்ளே சென்று பார்த்தபோது அங்கு உள்ள அறையில் பீரோவில் வைக்கப்பட்டு இருந்த கைச்சங்கிலி, மோதிரம், ஆரம், சங்கிலி, நெக்லஸ் உள்பட 17 வகையான தங்க நகைகள், வெள்ளிப் பொருட்கள் மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்தது. மர்ம நபர்கள் கொள்ளையடித்துச்சென்ற தங்க நகைகளின் மொத்த எடை 15 பவுன் ஆகும். இதன் மதிப்பு ரூ.4½ லட்சம் என்று கூறப்படுகிறது.
கணேசனும், அவரது குடும்பத்தினரும் வெளியூர் சென்று விட்டதை தெரிந்து கொண்ட மர்ம நபர்கள், இரவில் அவரது வீட்டுக்கு வந்து வீட்டின் கதவுகளில் பூட்டி இருந்த பூட்டை உடைத்து வீட்டுக்குள் இருந்த தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்துச்சென்று விட்டனர்.
போலீசார் விசாரணை
இந்த கொள்ளை சம்பவம் குறித்து திருவையாறு போலீஸ் நிலையத்தில் கணேசன் புகார் அளித்தார். தகவல் அறிந்ததும் திருவையாறு துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜ்மோகன் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினார். மேலும் திருவையாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஞானமுருகன், ரேணுகா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
மேலும் போலீஸ் மோப்ப நாய் ‘டப்பி’ வரவழைக்கப்பட்டது. அது கொள்ளை நடந்த வீட்டில் இருந்து கீழ வீதி, வடக்கு மடவளாகம் வரை சென்று அங்கு உள்ள தண்ணீர் குழாய் அருகில் படுத்துக்கொண்டது. கைரேகை நிபுணர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள் அமலா, சங்கவி ஆகியோர் தலைமையில் வந்து கொள்ளை நடந்த வீட்டில் பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்தனர்.
பரபரப்பு
இந்த கொள்ளை சம்பவம் குறித்து திருவையாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அரசு பள்ளி ஆசிரியை வீட்டின் பூட்டை உடைத்து நகைகளை கொள்ளையடித்துச்சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.