நீர்வரத்து பாதையில் உடைப்பு

சிவகாசியில் நீர்வரத்து பாதையில் உடைப்பு ஏற்பட்டதை தொடர்ந்து தாசில்தார் சம்பவ இடத்துக்கு சென்று தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டார்.;

Update: 2021-11-18 19:35 GMT
சிவகாசி, 
சிவகாசியில் நீர்வரத்து பாதையில் உடைப்பு ஏற்பட்டதை தொடர்ந்து தாசில்தார் சம்பவ இடத்துக்கு சென்று தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டார்.
மழை பதிவு
சிவகாசி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் 2 மணி நேரம் மழை பெய்தது. இதனால் பல இடங்களில் மழை நீர் குளம் போல் தேங்கியது.  இதனால் கண்மாய்கள், ஓடைகளுக்கு நீர் வரத்து அதிகமானது.  சிவகாசி யூனியனில் உள்ள அனுப்பன்குளம் பஞ்சாயத்துக்குட்பட்ட மீனம்பட்டி திடீர் காலனியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அந்த பகுதியில் உள்ள வீடுகளுக்குள் மழை நீர் சென்றது. 
இதனால் அப்பகுதி மக்கள் அனைவரும் வீட்டில் இருந்து வெளியேறி வீதிக்கு வந்தனர். பின்னர் இது குறித்து வருவாய்த்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பின்னர் இரவு 10.30 மணிக்கு தாசில்தார் ராஜ்குமாரின் உத்தரவின் பேரில் மழைநீர் வேறு பகுதிக்கு திருப்பி விடப்பட்டது. 
உடைப்பு
சிவகாசி தாலுகாவில் உள்ள புதுக்கோட்டை கண்மாய்க்கு வத்திராயிருப்பு தாலுகாவில் உள்ள வி.களத்தூர் கண்மாயில் இருந்து தண்ணீர் வருவது வழக்கம். இந்தநிலையில் வத்திராயிருப்பு பகுதியில் பெய்த கனமழை காரணமாக தண்ணீர் அதிக அளவில் வி. களத்தூர் கண்மாய்க்கு வந்தது. இந்த கண்மாயில் இருந்து புதுக்கோட்டை கண்மாய்க்கு தண்ணீர் வரும் பாதையில் திடீர் உடைப்பு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 
 இதுகுறித்து அப்பகுதி மக்கள் சிவகாசி தாசில்தார் ராஜ்குமாருக்கு தகவல் தெரிவித்தனர். இதை தொடர்ந்து வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து உடைப்பை சரி செய்ய முயற்சி செய்தனர். தாசில்தார் ராஜ்குமாரின் உத்தரவின் பேரில் மணல் அள்ளும் எந்திரம் மற்றும் மணல் மூடைகளை கொண்டு உடைப்பு சரி செய் யப்பட்டது. 
சிவகாசி தாலுகாவுக்கு உட்பட்ட பகுதியில் பல வீடுகள் சேதமானது. சாமிநத்தம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட மண்ணுக்கு மீட்டான்பட்டி கிராமத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான 6 ஆடுகள் மின்னல் தாக்கி பரிதாபமாக இறந்தது.

மேலும் செய்திகள்