தனியார் நிறுவன ஊழியர் ஆற்றில் விழுந்து பலி

சமயபுரம் அருகே வெள்ளநீரை வேடிக்கை பார்த்த தனியார் நிறுவன ஊழியர் ஆற்றில் விழுந்து தண்ணீரில் மூழ்கி பலியானார்.

Update: 2021-11-18 19:28 GMT
சமயபுரம், நவ.19-
சமயபுரம் அருகே வெள்ளநீரை வேடிக்கை பார்த்த தனியார் நிறுவன ஊழியர் ஆற்றில் விழுந்து தண்ணீரில் மூழ்கி பலியானார்.
பெரிய குளம்
திருச்சி மாவட்டம் சமயபுரத்தை அடுத்த சிறுகனூர் அருகே எதுமலையில் பெரிய குளம்  உள்ளது. இந்த குளம் தூர்வாரப்பட்டு சுமார் 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. ஆனால் நிரம்பாமல் இருந்தது.
இந்த நிலையில் இப்பகுதியில் தொடர் மழை பெய்து வருவதை தொடர்ந்து இக்குளம் நிரம்பி கலிங்கு வழியாக ஆற்றில் வழிந்தோடியது. இதை அப்பகுதியை சேர்ந்த ஏராளமானோர் ஆர்வமாக வந்து வேடிக்கை பார்த்து சென்றனர்.
ஆற்றில் மூழ்கி பலி
இந்தநிலையில் சிறுகனூர் அருகே உள்ள எதுமலை பள்ளர் தெருவை சேர்ந்த கோவிந்தசாமி  மகன் சஞ்சீவிகுமார் (வயது 19) என்பவர் குளம் நிரம்பி ஆற்றில் ஓடிய தண்ணீரை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக கால்இடறி ஆற்றுக்குள் விழுந்தார். இதனையடுத்து வெள்ளநீர் அவரை இழுத்து சென்றது. தொடர்ந்து அவர் ஆற்று தண்ணீரில் மூழ்கினார்.
இது குறித்து தகவல் அறிந்த சமயபுரம் தீயணைப்பு  நிலைய அலுவலர் முத்துக்குமார் தலைமையிலான வீரர்கள் விரைந்து வந்து சஞ்சீவிகுமாரை தேடும் பணியில் ஈடுபட்டனர். சில மணிநேர தேடுதலுக்கு பிறகு அவர் பிணமாக மீட்கப்பட்டார். இறந்த சஞ்சீவிகுமாரின் உடலை பார்த்து குடும்பத்தினர் கதறி அழுதது கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது.
இதனையடுத்து சிறுகனூர் போலீசார் சஞ்சீவிகுமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். டிப்ளமோ படித்து இருந்த சஞ்சீவிகுமார் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். விடுமுறையில் ஊருக்கு வந்த போது, இந்த பரிதாப சம்பவம் நடைபெற்றுள்ளது.

மேலும் செய்திகள்