சித்தமல்லி நீர்த்தேக்கம்,பொன்னேரியில் இருந்து உபரிநீர் திறப்பு
சித்தமல்லி நீர்த்தேக்கம்,பொன்னேரியில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டது
விக்கிரமங்கலம்
அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே உள்ளது, காசான்கோட்டை கிராமம். இங்குள்ள சித்தமல்லி நீர்த்தேக்கம் அதன் முழு கொள்ளளவை எட்டியது. இதனையடுத்து நீர்த்தேக்கத்திலிருந்து நேற்று உபரிநீர் திறக்கப்பட்டது. அந்த தண்ணீர் ஓடும் வடிகால்கள், ஓடைகள் பலப்படுத்தப்படாமல் இருந்ததால் அதன் கரைகளில் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டு நடவு செய்யப்பட்டுள்ள ஸ்ரீபுரந்தான், அருள்மொழி, அணைகுடி போன்ற கிராமங்களை சேர்ந்த சுமார் 1000 ஏக்கர் விளைநிலங்களில் தண்ணீர் புகுந்து நெற்பயிர்கள் மூழ்கின.
இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால், நெற்பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே, நீரை வடிய வைக்க வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.
மீன்சுருட்டி
அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஒன்றியம், சித்தமல்லி நீர் தேக்கம் மற்றும் ஜெயங்கொண்டம் ஒன்றியம், பொன்னேரியிலிருந்து வெளியேற்றப்படும் உபரிநீரை மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஏரியின் பாதுகாப்பு கருதி 500 மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும், பொதுப்பணித்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் ஆறுகள், ஏரிகள் மற்றும் குளங்களில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்படுவதால் பொதுமக்கள் நீர்நிலைகளுக்கு செல்ல வேண்டாம் என கலெக்டர் அறிவுறுத்தினார்.
மேலும், மழைக்காலங்களில் பொதுமக்களை தங்க வைப்பதற்காக தற்காலிக முகாம்களை தயார் செய்யவும், அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை தயார் நிலையில் வைத்திருக்கவும் வருவாய்த்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்பினரை கலெக்டர் கேட்டுக்கொண்டார். இந்த ஆய்வின்போது, உதவிசெயற்பொறியாளர் சாந்தி, தாசில்தார் ஆனந்தன், உதவிப்பொறியாளர் ராஜாசிதம்பரம் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.