தரைப்பாலத்தை மூழ்கடித்த வெள்ளம்
பெரம்பலூர் மாவட்டத்தில் தரைப்பாலத்தை மூழ்கடித்து வெள்ளம் நீர் பாய்ந்து செல்கிறது
பெரம்பலூர்
கீழப்பெரம்பலூர்-வேள்விமங்கலம் இடையே உள்ள சின்னாறு தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி மழைவெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அத்தியாவசிய தேவைக்கு ஆபத்துடன் இந்த பாலத்தை கடந்து கீழப்பெரம்பலூர் வந்து அங்கிருந்து அரியலூர் மற்றும் பெரம்பலூர் நகரங்களுக்கு செல்ல வேண்டி உள்ளது. இந்த அவலநிலை நீங்க இந்த பாலத்தை மேம்பாலமாக கட்டித்தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், மழை பாதிப்பு பகுதிகளை அதிகாரிகள் யாரும் பார்வையிட வரவில்லை என்றும் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, அகரம்சிகூர் வசிஸ்டபுரம் கீழப்பெரம்பலூர், துங்கபுரம் உள்ளிட்ட பகுதியில் சுமார் ஆயிரம் ஏக்கருக்கு மேல் பருத்தி மற்றும் சோளப் பயிர்கள் தண்ணீர் மூழ்கியுள்ளதால் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஏக்கருக்கு ரூ.20 ஆயிரத்துக்கு மேல் செலவு செய்த விவசாயிகள் வாங்கிய கடனை எப்படி அடைப்பது என்று வேதனை அடைந்த அவர்கள் பாதிப்பு நிலங்களை அதிகாரிகள் பார்வையிட்டு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.