7 ஆண்டுகளுக்கு பிறகு பேர்நாயக்கன்பட்டி ஊருணி நிரம்பியது

தாயில்பட்டியில் பலத்த மழை பெய்தது. இதனால் 7 ஆண்டுகளுக்கு பிறகு பேர்நாயக்கன்பட்டி ஊருணி நிரம்பியது. இதனால் கரையை பலப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Update: 2021-11-18 19:04 GMT
தாயில்பட்டி, 
தாயில்பட்டியில் பலத்த மழை பெய்தது. இதனால் 7 ஆண்டுகளுக்கு பிறகு பேர்நாயக்கன்பட்டி ஊருணி நிரம்பியது. இதனால் கரையை பலப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 
வீடுகள் சேதம் 
தாயில்பட்டி, சுப்பிரமணியபுரம், சல்வார் பட்டி, வெற்றிலையூரணி, கீழதாயில்பட்டி, விஜயகரிசல்குளம், மீனாட்சிபுரம், துரைசாமிபுரம், கோதை நாச்சியார்புரம், மடத்துப்பட்டி, மண்குண்டம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் 6 மணி நேரம் பலத்த மழை பெய்தது. 
இந்தநிலையில் தாயில்பட்டி ஊராட்சியை சேர்ந்த எஸ்.பி.எம். தெருவில் உள்ள செல்லச்சாமி மனைவி ஈஸ்வரி (வயது 48) என்பவருக்கு சொந்தமான வீட்டின் ஒரு பக்க சுவர் இடிந்து விழுந்தது. அருகில் யாரும் இல்லாததால் உயிர்சேதம் இல்லை. 
அதேபகுதியை சேர்ந்த காசிராஜன், யோபு, வேளாங்கண்ணி, அற்புத மணி ஆகியோரின் வீடுகளும் சேதமடைந்தன. 
ஊருணி நிரம்பியது 
செக்கடி தெருவில் ராமசுப்ரமணியன் என்பவரின் வீட்டிற்குள் தண்ணீர் புகுந்தது. இதையடுத்து அவரை நூலகத்தில் தங்க வைத்ததுடன், தேங்கிய மழைநீரை அகற்றும் பணியில் தாயில்பட்டி வருவாய் ஆய்வாளர் சாரதா தேவி, கிராம நிர்வாக அலுவலர் ரவி ராஜ் ஆகியோர் நடவடிக்கை மேற்கொண்டனர். 
தாயில்பட்டி பகுதியில் பெய்த தொடர்மழையினால் 7 ஆண்டுகளுக்கு பிறகு பேர்நாயக்கன்பட்டி ஊருணி நிரம்பியது. இதனால் பேர்நாயக்கன்பட்டி, கொங்களாபுரம் ஆகிய பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் பயன்பெறுவர். அத்துடன் இந்த பகுதியில் நிலத்தடி நீர் மட்டமும் ெவகுவாக உயர வாய்ப்பு உள்ளதாக விவசாயிகள் கூறினர். 
அதேபோல 10 ஆண்டுகளுக்கு பிறகு தாயில்பட்டி பெரியகுளம் கண்மாய்க்கு தண்ணீர் வந்தது. இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

மேலும் செய்திகள்