அமராவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு
10 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டதால் அமராவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.;
க.பரமத்தி,
அமராவதி அணை
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அருகே அமராவதி அணை உள்ளது. இந்த அணையின் மொத்த உயரம் 90 அடி ஆகும். இதன் மொத்த கொள்ளளவு 4,047 மில்லியன் கன அடி ஆகும். இந்த அணையில் இருந்து வெளிவரும் தண்ணீர் மூலம் திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் சுமார் 54 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகின்றன.
இதனால் இந்த பகுதிகளில் நெல், கரும்பு, மஞ்சள், மக்காச்சோளம், வாழை போன்ற பயிர்கள் சாகுபடி செய்கின்றனர். இதேபோல் கரூர் மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக பயன்பட்டு வருகிறது.
வெள்ளப்பெருக்கு
இந்த நிலையில் கடந்த 3 வாரங்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும் அமராவதி அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து தூவானம், பாம்பாறு, தேனாறு, சின்னாறு ஆகிய பகுதிகளில் இருந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
இதையடுத்து கடந்த 2 வாரமாக அணையின் நலன் கருதி உபரி நீர் திறக்கப்பட்டது. மேலும் நேற்று அதிகாலை 2 மணியளவில் அணைக்கு திடீரென 10 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது. அந்த தண்ணீரை அப்படியே வெளியேற்றப்பட்டது. இதனால் நேற்று மதியம் கரூர் மாவட்ட அமராவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
அமராவதி அணையின் நீர்மட்டம் நேற்று மாலை 6 மணியளவில் 88 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 1,000 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து ஆற்றுக்கு 1,000 கன அடி தண்ணீர் உபரி நீராக திறக்கப்பட்டுள்ளது. அணையில் 3,866 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது. மேலும் நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்தால் அணையின் நலன் கருதி அணைக்கு வரும் தண்ணீரை அப்படியே வெளியேற்றப்படும்.
இதனால் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி மாவட்ட நிர்வாகமும், பொதுப்பணித்துறை அதிகாரிகளும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.