நாமக்கல் மாவட்டம் முழுவதும், ஒரே நாளில் இளம்வயது திருமணம் செய்த 20 பேர் கைது போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் தகவல்
நாமக்கல் மாவட்டம் முழுவதும், ஒரே நாளில் இளம்வயது திருமணம் செய்த 20 பேர் கைது போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் தகவல்
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் இளம்வயது திருமணம் செய்த 20 பேரை போலீசார் கைது செய்திருப்பதாக போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் தெரிவித்துள்ளார்.
இளம்வயது திருமணம்
நாமக்கல் மாவட்டத்தில் இளம்வயது திருமணங்கள் அதிகளவில் நடைபெறுவதை தடுக்கும் நோக்கத்தில் நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் மாவட்டம் முழுவதும் சிறப்பு தணிக்கை மேற்கொண்டு இளம்வயது திருமணம் செய்வதர்கள் மீது நடவடிக்கை எடுக்க துணை போலீஸ் சூப்பிரண்டுகளுக்கு உத்தரவிட்டார்.
அதன்பேரில் கடந்த 24 மணி நேரத்தில் நாமக்கல் உட்கோட்டத்தில் நாமக்கல் பகுதியை சேர்ந்த 3 பேரும், எருமப்பட்டியை சேர்ந்த 2 பேரும், மோகனூர் பகுதியை சேர்ந்த ஒருவரும், புதுச்சத்திரம் பகுதியை சேர்ந்த 3 பேரும், திருச்செங்கோடு உட்கோட்டத்தில் மல்லசமுத்திரம், பள்ளிபாளையம், வெப்படை பகுதிகளை சேர்ந்த தலா ஒருவரும், பரமத்திவேலூர் உட்கோட்டத்தில் பரமத்தியை சேர்ந்த 4 பேரும், ஜேடர்பாளையம் பகுதியை சேர்ந்த 2 பேரும், நல்லூர் மற்றும் வேலகவுண்டம்பட்டி பகுதிகளை சேர்ந்த தலா ஒருவரும் என மொத்தம் 20 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
20 பேர் கைது
இதுகுறித்து நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் கூறியதாவது:- போலீசாரின் விசாரணையில் 17 வயதிற்கு உட்பட்ட 9 பேருக்கும், 16 வயதிற்கு உட்பட்ட 6 பேருக்கும், 15 வயதிற்கு உட்பட்ட 3 பேருக்கும், 13 மற்றும் 14 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளுக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
எனவே கைதான 20 பேர் மீதும் குழந்தை திருமணம் தடைச்சட்டம் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் தடைச்சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் குழந்தை திருமணத்திற்கு உடந்தையாக இருந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் மீது கைது நடவடிக்கை மேற்கொண்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட உள்ளனர்.
கடுமையான நடவடிக்கை
நாமக்கல் மாவட்ட காவல்துறை, வருவாய்த்துறை மற்றும் சைல்டு லைன் அமைப்பின் சார்பில் பல்வேறு பகுதிகளிலும் குழந்தை திருமணம் தடை தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் குழந்தை திருமணம் சம்பந்தமான புகார்களுக்கு 1098, நாமக்கல் காவல் கட்டுப்பாட்டு அறை எண் 100 எண்களில் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம். குழந்தை திருமணம் செய்பவர்கள் மற்றும் அதற்கு உடந்தையாக இருப்பவர்கள் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
===========