தொழில் நஷ்டத்தால் விபரீதம்: காவிரி ஆற்றில் குதித்து விசைத்தறி உரிமையாளர் தற்கொலை

தொழில் நஷ்டத்தால் விபரீதம்: காவிரி ஆற்றில் குதித்து விசைத்தறி உரிமையாளர் தற்கொலை

Update: 2021-11-18 18:10 GMT
பள்ளிபாளையம்:
விசைத்தறி தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் காவிரி ஆற்றில் குதித்து விசைத்தறி உரிமையாளர் தற்கொலை செய்து கொண்டார்.
விசைத்தறி உரிமையாளர்
பள்ளிபாளையம் வெடியரசம்பாளையம் நவக்காடு பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 32). விசைத்தறி உரிமையாளர். இவருடைய மனைவி சிந்துஜா (30). இவர்களுக்கு கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. குழந்தைகள் இல்லை. இந்த நிலையில் கார்த்திகேயனுக்கு கடந்த சில மாதங்களாக விசைத்தறி தொழில் சரிவர நடைபெறவில்லை என்று கூறப்படுகிறது. 
இதனால் தொழிலில் நஷ்டத்தை சந்தித்த அவர் வாழ்க்கையில் வெறுப்படைந்து கடந்த 15-ந் தேதி வீட்டை விட்டு வெளியில் சென்றவர் காவிரி பாலத்தில் இருந்து ஆற்றுக்குள் குதித்தார். கணவர் வீட்டுக்கு வராததால் அதிர்ச்சி அடைந்த சிந்துஜா அவரை உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தேடினார். 
உடல் கரை ஒதுங்கியது
ஆனால் எங்கும் கிடைக்காததால் கணவரை கண்டுபிடித்து தருமாறு பள்ளிபாளையம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி கார்த்திகேயனை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று காலை ஓடப்பள்ளி கதவணையில் ஆண் உடல் கரை ஒதுங்கியதை கதவணை ஊழியர்கள் பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 
அதன்பேரில் ேபாலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தியதில் கரை ஒதுங்கியது கார்த்திகேயனின் உடல் என தெரியவந்தது. மேலும் இதனை அவருடைய மனைவி சிந்துஜா அங்கு சென்று உறுதிப்படுத்தினார். இதையடுத்து கார்த்திகேயனின் உடல் பிரேத பரிசோதனைக்காக பள்ளிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்