திருவண்ணாமலையில் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

திருவண்ணாமலையில் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.;

Update: 2021-11-18 18:08 GMT
திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

 தொடர் மழை

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்த தொடர் மழை காரணமாக மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஏரி, குளங்களுக்கு நீர் வரத்து ஏற்பட்டுள்ளது. இதனால் ஏரி, குளங்கள் நிரம்பி உபரிநீர் வெளியேறி வருகின்றது. 

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள வேங்கிக்கால் ஏரியில் இருந்து உபரிநீர் அதிகளவு வெளியேறி வருவதால் அவைகள் சாலைகளில் தேங்காமல் இருக்க பொக்லைன் எந்திரங்கள் மூலம் கால்வாய்கள் அகலப்படுத்தபட்டன. 

இருப்பினும் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு மழைநீர் ஏரியின் அருகில் உள்ள தாழ்வான பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகள் வழியாக செல்வதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 

 நெற்பயிர்கள் மூழ்கின

ஏரிகளில் இருந்து வெளியேறி தண்ணீர் முக்கிய சாலையோரங்களில் குளம்போல் தேங்கி உள்ளன. சில இடங்களில் சாலை வழியாக தண்ணீர் செல்வதால் வாகன போக்குவரத்தில் சிரமங்கள் ஏற்பட்டன. 


தற்போது பெய்து வரும் தொடர் மழையால் திருவண்ணாமலை, போளூர், செய்யாறு, வந்தவாசி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் மழை வெள்ளத்தில் மூழ்கி சேதமடைந்தன. 

 இயல்பு வாழ்க்கை பாதிப்பு

இந்த தொடர் மழையினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. நேற்று மாலை 4 மணி வரை உள்ள நிலவரப்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் தண்டராம்பட்டு பகுதியில் 60 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகி உள்ளது. 

மற்ற பகுதியில் பெய்த மழையின் அளவு மில்லி மீட்டரில் வருமாறு:- 

திருவண்ணாமலை-35, கீழ்பென்னாத்தூர்-29.4, ஜமுனாமரத்தூர், வெம்பாக்கம் மற்றும் ஆரணி-27, சேத்துப்பட்டு-25.8, கலசபாக்கம்-25, செங்கம்-18, செய்யாறு-16, போளூர்- 12.3, வந்தவாசி-9.

மேலும் செய்திகள்