வாலிபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

மாணவியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து தேனி மாவட்ட மகளிர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.

Update: 2021-11-18 17:49 GMT
தேனி: 


மாணவி கடத்தல்
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தாமரைக்குளத்தை சேர்ந்த மேத்யூ மகன் டேனியல் ராஜ் (வயது 21). கூலித்தொழிலாளி. இவர் கடந்த 2019-ம் ஆண்டு ஒரு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்த 17 வயது மாணவியை காதலிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி அவருடன் பழகினார். பின்னர் அந்த மாணவியை வலுக்கட்டாயமாக ஆட்டோவில் ஏற்றி கம்பத்துக்கு கடத்தி சென்றார்.
கம்பத்தில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கி, அவரை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி அவரை பாலியல் பலாத்காரம் செய்தார். அவரிடம் இருந்து அந்த மாணவி தப்பி வந்து தனது பெற்றோரிடம் நடந்த விவரத்தை கூறினார். இதுகுறித்து தென்கரை போலீஸ் நிலையத்தில், மாணவியின் தந்தை புகார் செய்தார்.

போக்சோ சட்டம்
அதன்பேரில் இந்திய தண்டனை சட்டம் 366 (ஆள் கடத்தல்), போக்சோ ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் டேனியல் ராஜை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு, தேனி மாவட்ட மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது.
அரசு தரப்பில் வக்கீல் ராஜராஜேஸ்வரி ஆஜராகி வாதாடினார். வழக்கின் இறுதி விசாரணை முடிந்ததை தொடர்ந்து நீதிபதி வெங்கடேசன் நேற்று தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் டேனியல்ராஜ் குற்றவாளி என நீதிபதி அறிவித்து அவருக்கான தீர்ப்பை வாசித்தார்.

20 ஆண்டு சிறை
அதன்படி டேனியல் ராஜிக்கு, மாணவியை கடத்திச் சென்ற குற்றத்துக்கு 2 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.2 ஆயிரம் அபராதமும்,  அபராதம் செலுத்த தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனையும், பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்துக்கு போக்சோ சட்டத்தின் கீழ் 20 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.3 ஆயிரம் அபராதமும், அபராதம் செலுத்த தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனையும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

இதையடுத்து சிறை தண் டனை விதிக்கப்பட்ட டேனியல் ராஜை போலீசார் பாதுகாப்பாக அழைத்துச் சென்று மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்