தொடர் மழையால் நீர்வரத்து அதிகரிப்பு: மணிமுக்தா அணையில் இருந்து வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடி தண்ணீா் வெளியேற்றம் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

தொடர் மழையால் நீர்வரத்து அதிகரித்ததையடுத்து மணிமுக்தா அணையில் இருந்து வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடி தண்ணீா் வெளியேற்றப்படுகிறது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.;

Update: 2021-11-18 17:44 GMT
கள்ளக்குறிச்சி, 

மணிமுக்தா அணை

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை, சங்கராபுரம் பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் கள்ளக்குறிச்சி அருகே உள்ள 36 அடி கொள்ளளவு கொண்ட மணிமுக்தா அணையின் நீர்மட்டம் 34 அடியை எட்டியது. இதையடுத்து அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வந்த 1,567 கன அடி நீரையும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மணிமுக்தா ஆற்றில் திறந்து விட்டிருந்தனர். இந்தநிலையில் மணிமுக்தா அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று மாலை வரை பெய்த பலத்த மழை காரணமாக இரவு அணைக்கு வினாடிக்கு 3,104 கனஅடி நீர் வந்தது. அதைத்தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு அணையில் இருந்து வினாடிக்கு 3,104 கனஅடி நீர் ஆற்றில் திறக்கப்பட்டது.

வெள்ள அபாயம்

இந்தநிலையில் இரவு 9 மணியளவில் அணைக்கு வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடி நீர் வந்தது. நீர்வரத்து அதிகரித்ததை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் உத்தரவின்பேரில் அணையின் பாதுகாப்பு கருதி நேற்று இரவு 10.30 மணியளவில் அணையில் இருந்து வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடி நீரை மணிமுக்தா ஆற்றில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் திறந்து விட்டனர். இதனால் மணிமுக்தா ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்லவேண்டும் என மாவட்ட நிர்வாகம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் செய்திகள்