முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 141 அடியை எட்டியது

முல்லைப்பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால், அணையின் நீர்மட்டம் 141 அடியை எட்டியது. இதனால் கேரளாவுக்கு மீண்டும் தண்ணீர் திறக்கப்பட்டது.

Update: 2021-11-18 17:35 GMT
தேனி: 


முல்லைப்பெரியாறு அணை
தமிழக-கேரள மாநில எல்லையில் உள்ள முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்ட உயரம் 152 அடி. இதில் 142 அடி வரை தண்ணீர் தேக்கிக் கொள்ள சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த ஒரு மாத காலமாக மழை பெய்து வருகிறது.
கடந்த மாதம் 29-ந்தேதி அணையின் நீர்மட்டம் 138.50 அடியாக இருந்த போது கேரளாவுக்கு நீர் திறக்கப்பட்டது. அதுவும் கேரள மந்திரிகள் முன்னிலையில் நீர் திறக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதை கண்டித்து பல்வேறு ஆர்ப்பாட்டங்களும் நடந்தன. இதற்கிடையே கேரளாவுக்கு உபரிநீர் திறக்கப்பட்டது தமிழகம் எடுத்த முடிவு தான் என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் விளக்கம் அளித்தார்.

141 அடியை எட்டியது
கேரளாவுக்கு திறக்கப்பட்ட உபரிநீர் கடந்த 7-ந்தேதி நிறுத்தப்பட்டது. தொடர்ந்து அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் நீர்மட்டம் உயர்ந்தது. நேற்று அணையின் நீர்மட்டம் 141 அடியை எட்டியது. அப்போது அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 3 ஆயிரத்து 348 ஆக இருந்தது.
தமிழகத்துக்கு வினாடிக்கு 2 ஆயிரத்து 300 கன அடி நீர் திறக்கப்பட்டது. அணையின் நீர் இருப்பு 7 ஆயிரத்து 396 மில்லியன் கன அடியாக இருந்தது. இதையடுத்து நேற்று அதிகாலை 5 மணியளவில் இடுக்கி மாவட்டத்துக்கு 2-வது கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.

கேரளாவுக்கு நீர் திறப்பு
அணையில் இருந்து அதிகாலை 5.30 மணியளவில் 3, 4-வது மதகுகள் திறக்கப்பட்டு கேரளாவுக்கு வினாடிக்கு 772 கன அடி வீதம் மீண்டும் உபரிநீர் திறக்கப்பட்டது. தொடர்ந்து அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் பகல் 12 மணியளவில் கேரளாவுக்கு திறக்கும் உபரிநீர் அளவு வினாடிக்கு 1,546 கன அடியாக அதிகரிக்கப்பட்டது.

கேரளாவுக்கு மீண்டும் உபரிநீர் திறக்கப்பட்டது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, "சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி பருவகாலங்களுக்கு ஏற்றவாறு அணையின் நீர்மட்டத்தை நிர்ணயம் செய்யும் 'ரூல் கர்வ்' என்ற அட்டவணை முறையை மத்திய நீர்வள ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. அந்த அட்ட      வணையின் படி நவம்பர்         20-ந்தேதி வரை நீர்மட்டம் 141 அடியாக இருக்க வேண்டும். நவம்பர் 30-ந்தேதி நீர்மட்டம் 142 அடியாக இருக்கலாம். எனவே உபரிநீர் கேரளாவுக்கு திறக்கப்பட்டது. அணைக்கு வரும் நீர் வரத்தை பொறுத்து கேரளாவுக்கு திறக்கப்படும் நீர் அளவு மாறுபடும்" என்றார்.

கேரளாவுக்கு திறக்கப்பட்ட உபரிநீர் வண்டிப்பெரியார், வல்லக்கடவு, சப்பாத்து பகுதிகள் வழியாக இடுக்கி அணைக்கு செல்கிறது. இந்த ஆற்றின் கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 1 லட்சம் கன அடிக்கு மேல் ஓடும் இந்த ஆற்றில் நேற்று திறக்கப்பட்ட நீர் அளவு குறைவானதே என்பதால் ஆற்றுக் கரையோர பகுதிகளில் வசித்த மக்கள் தங்களின் இயல்பான வாழ்வை தொடர்ந்தனர். ஆற்றின் கரையோர வணிக நிறுவனங்கள் வழக்கம்போல் இயங்கின.

மேலும் செய்திகள்