திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் ஒரே நாளில் 321 மி.மீ. மழை கொட்டி தீர்த்தது அணைகள் வேகமாக நிரம்புவதால் விவசாயிகள் மகிழ்ச்சி
திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் ஒரே நாளில் 321 மி.மீ. மழை கொட்டித் தீர்த்தது. இதனால் அணைகள் வேகமாக நிரம்புவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
திண்டுக்கல்:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து இருக்கிறது. இதன் எதிரொலியாக மாநிலம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் மழை பெய்கிறது. இதில் திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த மாதத்தில் இருந்தே தொடர்ச்சியாக மழை பொழிவு காணப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் பகலில் மாவட்டம் முழுவதும் விட்டு, விட்டு சாரல் மழை பெய்தது. இதையடுத்து இரவில் பலத்த மழை பெய்தது. இதில் ஒட்டன்சத்திரம், பழனி, கொடைக்கானல், நிலக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் நள்ளிரவு வரை பலத்த மழை கொட்டித் தீர்த்தது. இதன்மூலம் ஒரே நாளில் 321.1 மி.மீ. மழை பதிவானது.
இதில் அதிகபட்சமாக சத்திரப்பட்டியில் 86.2 மி.மீ., பழனியில் 68 மி.மீ., கொடைக்கானல் அப்சர்வேட்டரியில் 44.6 மி.மீ. மழை பெய்தது குறிப்பிடத்தக்கது. மேலும் காமாட்சிபுரத்தில் 32.2. மி.மீ., நிலக்கோட்டையில் 29.2 மி.மீ., கொடைக்கானல் போட்கிளப்பில் 29 மி.மீ., நத்தத்தில் 18 மி.மீ., திண்டுக்கல்லில் 13.2 மி.மீ., வேடசந்தூரில் 0.4 மி.மீ., வேடசந்தூர் புகையிலை ஆராய்ச்சி மையத்தில் 0.3 மி.மீ. மழை பதிவானது.
வேகமாக நிரம்பும் அணைகள்
இதைத் தொடர்ந்து நேற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதன் எதிரொலியாக ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் மாவட்டம் முழுவதும் உள்ள அணைகள், குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதில் வரதமாநதி அணை (66.47அடி), காமராஜர் அணை (23.5 அடி) ஆகியவை ஏற்கனவே நிரம்பி விட்டன.
மேலும் 65 அடி உயரமுள்ள பாலாறு-பொருந்தலாறு அணையில் 63.19 அடியும், 90 அடி உயரமுள்ள பரப்பலாறு அணையில் 77.31 அடியும், 79.99 அடி உயரமுள்ள குதிரையாறு அணையில் 77.01 அடியும், 27.07 அடி உயரமுள்ள குடகனாறு அணையில் 21 அடியும், 39.37 அடி உயரமுள்ள நங்காஞ்சியாறு அணையில் 28.48 அடியும் தண்ணீர் உள்ளன. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். மேலும் இன்னும் ஒருசில நாட்களில் அனைத்து அணைகளும் நிரம்பி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குடியிருப்புக்குள் புகுந்த மழைநீர்
நிலக்கோட்டை தாலுகா அணைப்பட்டி நடுத்தெருவில் நேற்று முன்தினம் பெய்த மழையின் காரணமாக தாழ்வான இடங்களில் ஆங்காங்கே மழைநீர் தேங்கி வீடுகளுக்குள் புகுந்தது.
இதையடுத்து பாரதீய ஜனதா கட்சி ஒன்றிய தலைவர் ராமகிருஷ்ணன், இளைஞரணி மாவட்ட செயலாளர் எஸ். சுந்தர் ராஜா, இளைஞரணி ஒன்றிய தலைவர் சூர்யா மற்றும் பொதுமக்கள் அணைப்பட்டியில் நிலக்கோட்டை சாலையில் மறியல் செய்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் நிலக்கோட்டை தாசில்தார் தனுஷ்கொடி, விளாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் வனிதா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மழைநீர் தேங்காமல் இருக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பொதுமக்கள் சாலைமறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
ஆற்றில் அடித்து செல்லப்பட்ட பெண்
வத்தலக்குண்டு மஞ்சளாற்று தெருவை சேர்ந்த பாண்டுரங்கன் மனைவி நாகலட்சுமி(வயது 55). நேற்று முன்தினம் மஞ்சளாற்றுக்கு சென்ற இவர், திடீரென ஆற்றுக்குள் தவறி விழுந்தார். இதையடுத்து அவர் ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார். அப்போது அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர்.
பின்னர் இதுகுறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் நிலைய அலுவலர் விவேகானந்தன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து வத்தலக்குண்டு மஞ்சளாற்றில் நாகலட்சுமியை தேடினர். இதையடுத்து சுமார் ஒரு மணி நேர தேடுதலுக்கு பிறகு மஞ்சளாற்று பாலம் அருகே சிக்கியிருந்த நாகலட்சுமியின் உடலை தீயணைப்பு படையினர் மீட்டனர்.
சாலையில் விழுந்த ராட்சத மரம்
திண்டுக்கல் அடுத்த சிறுமலை 14-வது கொண்டை ஊசி வளைவில் மழை காரணமாக ராட்சத மரம் ஒன்று சாலையின் குறுக்கே வேருடன் சரிந்து விழுந்தது. இதையடுத்து சிறுமலை ஊராட்சி மன்ற தலைவர் சங்கீதா வெள்ளிமலை தலைமையில் பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலையின் குறுக்கே விழுந்து கிடந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினார்கள். இதனால் அந்த பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கிணறு இடிந்து விழுந்தது
கொடைக்கானல் கீழ்மலை கிராமங்களான பெரும்பாறை, தாண்டிக்குடி, பண்ணைக்காடு, தடியன்குடிசை, பாச்சலூர் ஆகிய பகுதிகளில் நேற்று முன்தினம் இடி, மின்னலுடன் விடிய, விடிய பலத்த மழை கொட்டி தீர்த்தது. இந்த மழையால் மலைப்பாதையில் ஆங்காங்கே மண்அரிப்பு மற்றும் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன.
இந்தநிலையில் மங்களம்கொம்பு-கானல்காடு இடையே நேற்று அதிகாலை மரம் வேரோடு சாய்ந்து விழுந்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் விரைந்து சென்று மரத்தை அறுத்து அப்புறப்படுத்தினர். இதனால் அந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. கனமழை காரணமாக கே.சி.பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகே சுமார் 70 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட குடிநீர் கிணறு இடிந்து விழுந்தது.
விவசாயிகள் கவலை
செம்பட்டி அருகே பச்சமலையான்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட எஸ்.புதுக்கோட்டை, புதுக்காமன்பட்டி, புதுச்சத்திரம், புதுசுக்குலாபுரம் உள்ளிட்ட கிராமங்களில் கோவக்காய் மற்றும் வெங்காயம் அதிகம் பயிரிட்டுள்ளனர். இதனிடையே தொடர் மழை காரணமாக இங்கு சாகுபடி செய்யப்பட்டு இருந்த வெங்காயம் மழைநீரில் நனைந்து சேதமடைந்தது. புதுசுக்குலாபுரம் கிராமத்தை சேர்ந்த ராமு (42) என்ற விவசாயின் கோவக்காய் பந்தல் மழையில் சாய்ந்து விழுந்தது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
மின்கம்பம் சாய்ந்தது
கன்னிவாடி அடுத்த வெள்ளமரத்துபட்டி அருகே செம்பட்டி-ஒட்டன்சத்திரம் சாலையில் பலத்த மழை காரணமாக மின்கம்பம் சாய்ந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் மின்வாரிய ஊழியர்கள் விரைந்து வந்து மின்கம்பத்தை சரி செய்தனர்.
ஒட்டன்சத்திரம் அடுத்த அத்திக்கோம்பை அருகே பரமேஸ்வரி என்பவர் நாற்றுப்பண்ணை நடத்தி வருகிறார். இந்நிலையில் கனமழையால் பைபாஸ் பாலத்தின் வழியாக ஓடைக்கு செல்லும் தண்ணீர் தடுப்பணை கட்டாத காரணத்தால் நாற்றுப் பண்ணைகள் புகுந்தது. இதில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான நாற்றுகள் சேதம் அடைந்தன.
கனமழை காரணமாக சத்திரப்பட்டி அருகே உள்ள பெரியதுரை ஓடையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த தண்ணீர் மூலம் சத்திரப்பட்டி கருங்குளம் நிரம்பி வருகிறது. இதனால் சத்திரப்பட்டி, கோபாலபுரம் புதுக்கோட்டை, தாசரிப்பட்டி பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.