ஆழியாறு பகுதியில் சாலையின் நடுவில் திடீர் பள்ளம்

ஆழியாறு பகுதியில் சாலையின் நடுவில் திடீர் பள்ளம்

Update: 2021-11-18 17:24 GMT
பொள்ளாச்சி

பொள்ளாச்சி அருகே ஆழியாறு பகுதியில் சாலையின் நடுவில் திடீர் பள்ளம் ஏற்பட்டது. இதன் காரணமாக அங்கு 5 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பலத்த மழை 

மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில்  பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக பொள்ளாச்சி அருகே உள்ள குரங்கு நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து  சுற்றுலா பயணிகள் இங்கு குளிக்க தடை விதிக்கப்பட்டது. 

இந்த நிலையில் வால்பாறை ரோட்டில் ஆழியாறு வனத்துறை சோதனை சாவடி அருகில் சாலையோரத்தில் திடீர் பள்ளம் ஏற்பட்டது. இதையடுத்து வாகனங்களை கவனமாக செல்ல வனத்துறையினர் அறிவுறுத்தினர்.

சாலையின் நடுவில் பள்ளம் 

இந்த நிலையில் காலை 7 மணியளவில் அந்த பள்ளம் ஏற்பட்ட அதேப்பகுதியில் சாலையின் நடுவே பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டது. 5 மீட்டர் அகலம், 4 அடி ஆழத்துக்கு அந்த பள்ளம் இருந்ததால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.  

இதன் காரணமாக சாலையின் இருபுறமும் வாகனங்கள் நீண்ட தூரத்துக்கு அணிவகுத்து நின்றன. வால்பாறைக்கு செல்பவர் களும், வால்பாறையில் இருந்து பொள்ளாச்சி திரும்பியவர்களும் கடுமையாக அவதியடைந்தனர். அந்த வழியாக வாகனங்கள் அனுமதிக்கப்படாததால், பலர் தங்கள் வாகனங்களை விட்டு கீழே இறங்கி சாலையில் காத்திருந்தனர். 

சீரமைப்பு பணிகள் 

இதுகுறித்து தகவல் அறிந்த நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் பரணீதரன் தலைமையில் உதவி கோட்ட பொறியாளர் உமாமகேஸ்வரி, உதவி பொறியாளர் பிரகாஷ் மற்றும் ஊழியர்கள் விரைந்து வந்து சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர். 

பின்னர் பொக்லைன் எந்திரம் மூலம் தோண்டி, ஜல்லி கற்கள் கொட்டி சமப்படுத்தப்பட்டது. இதை தொடர்ந்து காலை 11 மணிக்கு வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டது. சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம் காரணமாக காலை 7 மணி முதல் 11 மணி வரை 5 மணி நேரம் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர். 

பாலம் கட்ட நடவடிக்கை

இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறும்போது, கனமழை காரணமாக சாலையின் ஓரத்தில் மழைநீர் ஆறுபோல ஓடியது. பள்ளம் ஏற்பட்ட பகுதியில்தான் அந்த தண்ணீர் சாலையை கடந்து செல்கிறது. 

எனவே அதிகளவில் தண்ணீர் சென்றதால் பள்ளம் ஏற்பட்டு இருக்கிறது. எனவே அந்தப் பகுதியில் தண்ணீர் சாலையை கடக்க சிறிய அளவில் பாலம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். 

மேலும் செய்திகள்