திண்டுக்கல் மாவட்ட டாஸ்மாக் கடைகளில் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே மது விற்பனை
திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே மதுவிற்பனை செய்யப்படும் என்று டாஸ்மாக் கடைகளில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டத்தில் 18 வயது நிரம்பியவர்கள் 17 லட்சம் பேர் உள்ளனர். நேற்று முன்தினம் வரை 12 லட்சத்து 73 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு இருந்தது. மேலும் 100 சதவீத இலக்கை எட்டும் வகையில் நேற்று 9-வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
இதையொட்டி மாவட்டம் முழுவதும் 750 இடங்களில் முகாம் நடத்தப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதற்காக அனைத்து துறை அரசு ஊழியர்கள், போலீசார் மூலம் கொரோனா தடுப்பூசி செலுத்தாத நபர்களுக்கு செல்போனில் அழைப்பு விடுக்கப்பட்டது.
எனினும் நேற்று மாவட்டம் முழுவதும் 38 ஆயிரம் பேர் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டனர். ஏற்கனவே நடத்த முகாம்களுடன் ஒப்பிடுகையில் இது குறைவான அளவாகும். எனவே கொரோனா தடுப்பூசி செலுத்துவதை தீவிரப்படுத்த பல அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
மது விற்பனை
அதன்படி கொரோனா தடுப்பூசி செலுத்திய நபர்களுக்கு மட்டுமே மது விற்பனை செய்யப்படும் என்று நேற்று அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. மேலும் மது வாங்க வந்தவர்களிடம் தடுப்பூசி செலுத்தியதற்கான குறுந்தகவல் உள்ளிட்ட விவரங்களை, டாஸ்மாக் ஊழியர்கள் கேட்டு தெரிந்து கொண்டனர்.
அப்போது தடுப்பூசி செலுத்தாத நபர்களுக்கு மது விற்க மறுத்து விட்டனர். மேலும் முகாம் நடைபெறும் இடங்கள், மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களின் முகவரியை தெரிவித்து தடுப்பூசி செலுத்தி விட்டு வரும்படி விற்பனையாளர்கள் அறிவுறுத்தினர். இதனால் தடுப்பூசி செலுத்தாமல் மது வாங்க வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
இதற்கிடையே கொரோனா தடுப்பூசி செலுத்த அனுப்பப்பட்ட நபர்களின் எண்ணிக்கையை, ஒவ்வொரு விற்பனையாளரும் தெரிவிக்க வேண்டும் என்று டாஸ்மாக் நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.