காதல் தோல்வியால் கல்லூரி மாணவர் தற்கொலை

காதல் தோல்வி காரணமாக நண்பர்களுக்கு வாட்ஸ்-அப்பில் தகவல் அனுப்பி விட்டு கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.;

Update: 2021-11-18 17:04 GMT
கோவை

காதல் தோல்வி காரணமாக நண்பர்களுக்கு வாட்ஸ்-அப்பில் தகவல் அனுப்பி விட்டு கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

ஆன்லைன் வகுப்பு

நாமக்கல் மாவட்டம் சேரமங்கலம் பெருமாள் கோவில் வீதியை சேர்ந்தவர் பிரசாந்த் (வயது 19). இவர் கோவை பீளமேடு பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. கணிதம்  3-ம் ஆண்டு படித்து வந்தார். கொரோனா காரணமாக  சொந்த ஊரில் இருந்தபடி கடந்த 1½ ஆண்டுகளாக ஆன்லைன் மூலம் வகுப்பில் பங்கேற்று வந்தார்.

இந்த நிலையில் அவருக்கு ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்தார். படிப்பு முடிந்ததும் திருமணம் செய்து கொள்வதாக அந்த பெண்ணிடம், பிரசாந்த் கூறியதாக தெரிகிறது. இதையொட்டி அவர் சொந்த ஊரிலேயே பகுதி நேரமாக வேலைக்கு சென்று வந்தார். 

காதல் தோல்வி

இந்த நிலையில் கொரோனா தொற்று குறைந்தததால் கல்லூரிகள் திறக்கப்பட்டன. இதனால் பிரசாந்த் கோவை விளாங்குறிச்சி பகுதியில் உள்ள ஒரு அறையில் தனது நண்பர்களுடன் தங்கி கல்லூரிக்கு சென்று வந்தார். இந்த நிலையில் பிரசாந்திடம் பேசுவதை அவருடைய காதலி திடீரென்று நிறுத்தி விட்டதாக கூறப்படுகிறது.

இதனால் தனது காதல் தோல்வி அடைந்து விட்டதாக மனவேதனை அடைந்தார். இந்த நிலையில் பிரசாந்த் தனது நண்பர்களுக்கு வாட்ஸ்-அப் மூலமாக நான் வாழ விரும்ப வில்லை, தற்கொலை செய்து கொள்ள போகிறேன் என்று தகவல் அனுப்பினார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் அவரை தொடர்பு கொள்ள முயன்றனர்.

விசாரணை

ஆனால் அதற்குள் அவர் தான் தங்கியிருந்த அறையில் நேற்றுமுன்தினம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து அவருடைய அறைக்கு வந்த நண்பர்கள், பிரசாந்த் தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து கதறி அழுதனர். 

இது குறித்த புகாரின் பேரில் பீளமேடு போலீசார் விரைந்து வந்து பிரசாந்த் உடலை கைப்பற்றி கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்