வீடு புகுந்து தம்பதியை தாக்கி 16 பவுன் நகை- ரூ.2 லட்சம் கொள்ளை

கோவை ராமநாதபுரத்தில் வீடு புகுந்து தம்பதியை தாக்கி 16 பவுன் நகை மற்றும் ரூ.2 லட்சத்தை பறித்து சென்ற முகமூடி ஆசாமிகள் 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2021-11-18 17:03 GMT
கோவை

கோவை ராமநாதபுரத்தில் வீடு புகுந்து தம்பதியை தாக்கி 16 பவுன் நகை மற்றும் ரூ.2 லட்சத்தை பறித்து சென்ற முகமூடி ஆசாமிகள் 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

வீட்டு கதவு உடைப்பு

கோவை -திருச்சி ரோடுசுங்கத்தில் இருந்து உக்கடம் செல்லும் ரோடு ஆல்வின் நகரை சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 62). பீரோ விற்பனை செய்யும் ஏஜென்சி நடத்தி வருகிறார். இவருடைய மனைவி சாந்தி (57). இவர்களது மகள் வெளிநாட்டில் உள்ளார். இவர், நேற்று முன்தினம் இரவு தனது மனைவியுடன் வீட்டின் கீழ்தளத்தில் உள்ள அறையில் தூங்கினர். மேல் மாடியில் உறவினர் ஒருவரின் 19 வயது மகன் தங்கி இருந்தார். 

இந்த நிலையில் நேற்று அதிகாலை 2 மணி அளவில் முகமூடி அணிந்த 4 பேர் கொண்ட கும்பல் ஒன்று ராஜசேகரின் வீட்டு முன்பக்க கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்தது. பின்னர் அவர்கள் தம்பதி தூங்கி கொண்டிருந்த அறைக்கதவை உடைத்தனர். அந்த சத்தம் கேட்டு ராஜசேகர் திடுக்கிட்டு எழுந்தார். 

முகமூடி கும்பல்

ஆனால் அதற்குள் அந்த கும்பல் கதவை உடைத்து அறைக்குள் சென்றது. அந்த கும்பலை சேர்ந்தவர்கள் கண்கள் மட்டும்வெளியே தெரியும்வகையில்முகமூடி,கையுறைஅணிந்து இருந்தனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ராஜசேகர் சுதாரிப்பதற்குள் அந்த கும்பல் மரக்கட்டையால் சரமாரியாக தாக்கி கீழே தள்ளியது. பின்னர் அவரை மிரட்டி பணம் மற்றும் நகை எங்கே உள்ளது என்று ஆங்கிலத்தில் கேட்டு உள்ளனர்.

16 பவுன் நகை பறிப்பு

அந்த சத்தம் கேட்டு  சாந்தி திடுக்கிட்டு எழுந்தார். அவர் தனது கணவரை முகமூடி கும்பல் தாக்கி பணம், நகையை கேட்டதால் தனது கழுத்தில் அணிந்திருந்த தங்க செயின் உள்பட 16 பவுன் நகையை கழற்றி அந்த முகமூடிகும்பலிடம் கொடுத்தார். இதைத்தொடர்ந்து அந்த கும்பல்  சாந்தியிடம் இருந்த பீரோ சாவியை பறித்தனர். பின்னர் பீரோவில் இருந்த ரூ.2 லட்சம் பணத்தை கொள்ளையடித்தனர். இதையடுத்து ராஜசேகரை வீட்டிற்கு வெளியே இழுத்து வந்து போட்டு விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.

விசாரணை

இதனால் அதிர்ச்சி அடைந்த  சாந்தி வெளியே வந்து கூச்சல் போட்டு அக்கம்பக்கத்தினரை அழைத்தார். இது குறித்த தகவலின் பேரில் ராமநாதபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். கொள்ளையர்கள் தாக்கியதில் காயமடைந்த ராஜசேகர் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

இதையடுத்து மாநகர தெற்கு போலீஸ் துணை கமிஷனர் உமா, உதவி கமிஷனர் சதீஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசார ணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அங்கு பதிவாகி இருந்த தடயங்களை பதிவு செய்தனர்.கொள்ளையர்களை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்