நாகையில், 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
நாகையில் விடிய, விடிய பெய்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியதால் நாகையில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்பட்டது..
நாகப்பட்டினம்:
நாகையில் விடிய, விடிய பெய்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியதால் நாகையில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்பட்டது.
விடிய, விடிய மழை
வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகம் முழுவதும் கன மழை பெய்து வருகிறது. இதன்படி நாகை மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு 8 மணி முதல் மழை பெய்ய தொடங்கியது.
இந்த மழை விடிய, விடிய பெய்தது. தொடர்ந்து நேற்று மதியம் வரை நீடித்தது. இதனால் சாலையில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. எங்கு பார்த்தாலும் சாலைகளில் தண்ணீர் தேங்கி நின்றது. மேலும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் குளம் போல் தேங்கி நின்றது.
வயல்களில் தண்ணீர் தேங்கியது
கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையால் வயல்களில் தேங்கிய மழைநீர் வடிய தொடங்கிய நிலையில், மீண்டும் பெய்த மழையால் வயல்களில் தண்ணீர் தேங்கியது. இதனால் சம்பா, தாளடி பயிர்கள் தப்பிக்குமா? என்ற அச்சம் விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது. இதேபோல நாகூர், கீழ்வேளூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.
இந்த மழையின் காரணமாக மாவட்டத்தில் ஒரு ஆடு, இரண்டு மாடுகள் செத்துள்ளன. 15 குடிசை வீடுகள் பகுதியளவில் சேதம் அடைந்துள்ளன. மழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு நேற்று விடுமுறை விடப்பட்டது.
புயல் எச்சரிக்கை கூண்டு
வங்கக்கடல் மற்றும் தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. இதை தொடர்ந்து நாகை துறைமுகத்தில் நேற்று 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
நாகை மாவட்டத்தில் நேற்று காலை 8.30 மணியுடன் 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
திருப்பூண்டி 55.80, தலைஞாயிறு 53.40,நாகை 33.50, வேதாரண்யம் 32.40.