நாகை மீனவர்கள் 10 நாட்களாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை
நாகை மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக மீனவர்கள் 10 நாட்களாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் ரூ.30 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக மீனவர்கள் 10 நாட்களாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் ரூ.30 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.
10 நாட்களாக மீன்பிடிக்க செல்லவில்லை
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்ததாலும், வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாலும் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. நாகை மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்த தொடர் மழை காரணமாக கடந்த 9-ந் தேதியில் இருந்து 10 நாட்களாக மாவட்டத்தில் உள்ள 50 ஆயிரம் மீனவர்களும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால் 1,000 விசைப்படகுகள், 4,500 பைபர் படகுகள் அக்கரைப்பேட்டை, கடுவையாற்று கரை, நம்பியார் நகர் கடற்கரை, வேதாரண்யம் கடற்கரை, வெள்ளப்பள்ளம், நாகூர் வெட்டாற்று கரை ஆகிய பகுதிகளில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
ரூ.30 கோடி வர்த்தகம் பாதிப்பு
நாகை மாவட்டத்தில் பிடிக்கப்படும் மீன்கள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படும். இதன் மூலம் ஒரு நாளைக்கு ரூ.3 கோடிக்கு வர்த்தகம் நடைபெறும். ஆனால் தொடர் மழை காரணமாக கடந்த 10 நாட்களாக மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லாததால் ரூ.30 கோடிக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.
10 நாட்களாக மீன்பிடிக்க செல்லாததால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு தங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.