விடிய விடிய பலத்த மழை; மண்சரிவால் 12 வீடுகள் சேதம்

நீலகிரி மாவட்டத்தில் விடிய விடிய பலத்த மழை பெய்தது. மேலும் மண்சரிவால் 12 வீடுகள் சேதம் அடைந்தன. மேலும் மரக்கிளைகள் முறிந்து விழுந்ததால் மின்தடை ஏற்பட்டது.

Update: 2021-11-18 13:56 GMT
ஊட்டி

நீலகிரி மாவட்டத்தில் விடிய விடிய பலத்த மழை பெய்தது. மேலும் மண்சரிவால் 12 வீடுகள் சேதம் அடைந்தன. மேலும் மரக்கிளைகள் முறிந்து விழுந்ததால் மின்தடை ஏற்பட்டது.

பலத்த மழை

நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இந்த நிலையில் ஊட்டியில் நேற்று முன்தினம் பலத்த மழை பெய்தது. எல்க்ஹில் குமரன் நகர் பகுதியில் வீடுகளை ஒட்டி மண்சரிவு ஏற்பட்டது. இதில் 2 வீடுகள் இடிந்து விழுந்தன. முன்னதாக அங்கிருந்தவர்கள் வெளியே ஓடி வந்து உயிர் தப்பினர். மண்சரிவால் மேலும் 5 வீடுகள் அந்தரத்தில் தொங்குகின்றன.

வண்டிச்சோலையில் தோட்டத்தில் இருந்து மண் அடித்து வரப்பட்டு, வீடுகளுக்குள் கிடந்தது. இதனால் அங்கிருந்தவர்கள் உறவினர் வீடுகளுக்குள் தஞ்சம் புகுந்தனர். காந்தல் புதுநகரில் தடுப்புச்சுவர் இடிந்து விழுந்து, வீடு சேதம் அடைந்தது. படகு இல்ல சாலையில் கற்களால் ஆன தடுப்புச்சுவர் இடிந்து விழுந்தது. 

இதனால் சாலையோரத்தில் இருந்த குடிநீர் ஏ.டி.எம். எந்திரம், ஒரு நகர்வு கடை முற்றிலும் சேதமடைந்தது. மேலும் மின் கம்பம் வளைந்தது. இதனால் மின்தடை ஏற்பட்டது. தொடர்ந்து மின் ஊழியர்கள் புதிய மின்கம்பம் நட்டு மின்தடையை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். 

மண்சரிவு

இது தவிர காந்தல் கீழ் பள்ளிவாசல் தெரு உள்ளிட்ட இடங்களில் கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும் அருகில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. அதன்பிறகு தண்ணீர் வடிந்தாலும் வீடுகள் மற்றும் சுற்றுப்புற பகுதிகள் சேறும், சகதியுமாக மாறியது. நடைபாதைகளில் படிந்த சகதியை அகற்ற தூய்மைப் பணியாளர்கள் வராததால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

ஊட்டி-புதுமந்து சாலை, ஆடாசோலை, கீழ் கவ்வட்டி உள்ளிட்ட இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கோத்தகிரியில் கடினமாலா அருகே கொப்பையூரில் சிவகுமார் என்பவரது வீட்டின் சுவர் இடிந்தது. 

மாவட்டம் முழுவதும் விடிய விடிய பெய்த மழையில் ஊட்டி எல்க்ஹில், காந்தல் உள்ளிட்ட இடங்களில் மொத்தம் 12 வீடுகள் சேதம் அடைந்தன. பிங்கர்போஸ்ட் வி.சி. காலனியில் உள்ள நிவாரண முகாமில் 14 பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வருவாய்த்துறையினர் வழங்கினர். 

மேலும் வீடுகள் இடியும் நிலையில் வசிப்பவர்கள், பாதுகாப்பு இல்லாத நிலையில் இருப்பவர்கள் நிவாரண முகாம்களுக்கு வந்து தங்கிக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

மழை அளவு

பந்தலூரில் பெய்த மழையில் அய்யன்கொல்லி அருகே மூலக்கடை பகுதியில் மின்கம்பிகள் மீது மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. இதனால் விடிய விடிய மின் தடை ஏற்பட்டது. எருமாடு அருகே பனஞ்சிறாவில் ஆமீனா என்பவரது வீட்டின் பின்புறம் மண்சரிவு ஏற்பட்டது. அட்டிவயல் பகுதியில் சிமெண்டு சாலை பெயர்ந்தது. 

நீலகிரியில் நேற்று காலை 8 மணியுடன் 24 மணி நேரத்தில் முடிவடைந்த மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:-
ஊட்டி-98, நடுவட்டம்-12.5, கல்லட்டி-14, மசினகுடி-13, குந்தா-40, அவலாஞ்சி-83, எமரால்டு-56, கெத்தை-42, கிண்ணக்கொரை-43, அப்பர்பவானி-35, பாலகொலா-17, குன்னூர்-24, பர்லியார்-39, ேகத்தி-43, உலிக்கல்-31, எடப்பள்ளி-29, கோத்தகிரி-43, கீழ் கோத்தகிரி-41, கோடநாடு-85, கூடலூர்-42, தேவாலா-47, செருமுள்ளி-34, ஓவேலி-27, பந்தலூர்-18, சேரங்கோடு-118 என மழை பதிவாகி உள்ளது. 

மேலும் செய்திகள்