ஏரல் அருகே சார்பதிவாளர் அலுவலக மேலாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்

ஏரல் அருகே சார்பதிவாளர் அலுவலக மேலாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்

Update: 2021-11-18 12:59 GMT
ஏரல்:
ஏரல் அருகே சார்பதிவாளர் அலுவலக மேலாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்தனர். இதில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.
சார்பதிவாளர் அலுவலக மேலாளர்
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள சிவகளை நாடார் தெருவை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 45). இவருக்கு சுதா என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். ரவிச்சந்திரன் கடந்த ஆண்டு விளாத்திகுளத்தில் சார்பதிவாளராக பணியாற்றி வந்தார். அப்போது அவர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசுக்கு புகார் சென்றது. இதையடுத்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் விளாத்திகுளம் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினர். 
அப்போது, கணக்கில் வராத ரூ.3¾ லட்சம் சிக்கியது. இதுதொடர்பாக ரவிச்சந்திரன் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். தற்போது அவர் கும்பகோணம் சார்பதிவாளர் அலுவலகத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். தற்சமயம் ரவிச்சந்திரன் மருத்துவ விடுப்பில் தனது சொந்த ஊரான சிவகளையில் உள்ள வீட்டிற்கு வந்துள்ளார்.
லஞ்ச ஒழிப்பு சோதனை
இந்த நிலையில் தூத்துக்குடி லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு ஹெக்டர் தர்மராஜ் தலைமையில், இன்ஸ்பெக்டர்கள் சுதா, ஜெயஸ்ரீ, சப்-இன்ஸ்பெக்டர் பாண்டி உள்ளிட்ட 15 பேர் கொண்ட குழுவினர் சிவகளையில் உள்ள ரவிச்சந்திரன் வீடு மற்றும் அவரது மாமனார் சுந்தர்ராஜ் ஆகியோர்களின் வீடுகளில் நேற்று அதிகாலை 6 மணி முதல் சோதனை நடத்தினர். சோதனையின்போது வெளிநபர்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.
லஞ்ச ஒழிப்பு சோதனையின்போது, ரவிச்சந்திரன், அவரது உறவினர்கள் பெயரில் 2 பெரிய வீடுகள் இருப்பதும், தூத்துக்குடி பிரையண்ட் நகர் 2, 3-வது தெருவில் வீடுகள் இருப்பதும் தெரியவந்தது.
வருமானத்துக்கு அதிகமாக...
மேலும், வருமானத்துக்கு அதிகமாக சொத்து வாங்கி இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. மாலை வரை நடைபெற்ற இந்த சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.
சிவகளையில் சார்பதிவாளர் அலுவலக மேலாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
-----------------

மேலும் செய்திகள்