வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மண்பாண்ட தொழிலாளர்கள்; நிவாரண உதவி வழங்க தமிழக அரசுக்கு கோரிக்கை
வடகிழக்கு பருவ கனமழை காரணமாக வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மண்பாண்ட தொழிலாளர்கள் நிவாரண உதவி வழங்க தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மண்பாண்ட தொழிலாளர்கள்
காஞ்சீபுரம் மாவட்டத்தில் காஞ்சீபுரம், வாலாஜாபாத் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப் புறங்களில் மண்பாண்டத் தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர்.
மண்பாண்டத் தொழிலாளர்கள் தங்கள் தொழிலுக்குத் தேவையான முக்கிய மூலப்பொருளான களிமண்ணை குளங்கள் மற்றும் ஏரிகளில் இருந்து எடுத்து சட்டி, பானை, அடுப்பு, தொட்டி அகல்விளக்கு, என பல வகை மண்பாண்டம் உள்ளிட்டவைகளை தயாரித்து விற்பனை செய்து வாழ்வாதாரத்தை காத்து வருகின்றனர்.
மேலும் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா காலத்தில் விநாயகர் சிலை செய்வதும், கார்த்திகை தீப திருவிழாவிற்கு அகல்விளக்கு செய்வதும், பொங்கல் பண்டிகைக்கு புதுப்பானைகள் செய்து விற்பனை செய்து 3 முறை மட்டுமே தங்கள் குடும்பத்திற்கு தேவையான வருமானத்தை ஈட்டி வருவது வாடிக்கை.
அரசுக்கு கோரிக்கை
இந்நிலையில் வடகிழக்கு பருவமழை துவங்கி கடந்த ஒரு வாரமாக கன மழை பெய்து வந்ததால் ஏரிகளில் மண் எடுக்க முடியாமலும், கார்த்திகை தீப திருவிழாவிற்கு விற்பனை செய்ய அகல் விளக்குகளை தயாரிக்க முடியாமலும் போனது.
இதனால் மண்பாண்டத் தொழிலாளர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து மிகவும் பரிதவித்து வருகின்றனர். மேலும் ஏரி குளங்கள் அனைத்தும் நிரம்பி உள்ளதால் பொங்கல் பண்டிகைக்கு கூட மண்ணை எடுத்து புதுப்பானை செய்ய முடியாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது. வட கிழக்கு பருவமழையின் காரணமாக மண்பாண்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரம் நலிவடைந்துள்ளதால் விவசாயிகள், நெசவாளர்கள், மீனவர்களுக்கு வழங்குவதைப் போல மண்பாண்ட தொழிலாளர்களுக்கும் நிவாரண உதவித் தொகைகளை வழங்கி உதவிட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மண்பாண்டத் தொழிலாளர் குடும்பங்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.